காரைநகர் வேல் முருகன் ஆலயம் தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நான்கு பெண்கள் உட்பட 15 பேர் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் , இன்றைய தினம் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொண்ட போது இரு குழுவினர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்ததை அடுத்து அவர்களை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த கோயில் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சிவில் வழக்கு விசாரணையில் உள்ளது. அந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலயம் சார்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஒரு குழுவை சேர்ந்த சகோதர்கள் மூவர் உட்பட நெருங்கிய உறவினர்களான ஐந்து பேர் மற்றைய குழுவை சேர்ந்த ஒருவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டத்தை அடுத்து தாக்குதலாளிகள் ஐவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தபப்ட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மற்றைய குழுவினர் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினர் என ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் 4 பெண்கள் மற்றும் மற்றைய குழுவினரால் தாக்குதலுக்கு இலக்கான நபர் உட்பட பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யபட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டிருந்தார்;. இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு குழுவினர் சார்பிலும் இரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது தரப்பினரை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இரு தரப்பினரையும் பிணையில் விடுவித்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் இரு தரப்பினரின் முரண்பாட்டால் ஆலய பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்றில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இரு தரப்பினரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்த நீதிவான், இந்த முரண்பாடானது இரு ஊர்களுக்கு இடையில் ஏற்பட்டதோ அல்லது, பெரும் சனத்திரளுக்கு மத்தியில் ஏற்பட்ட முரண்பாடு இல்லை. இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாகவே மன்று கருதுகின்றது. காவல்துறையினர் ஆலய சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அமைதிக்கு பங்கம் ஏற்படாத வாறு பாதுகாப்பார்கள் என எனவே இவர்களை பிணையில் விடுவிப்பதனால் , பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது என மன்று கருதுகின்றது.
எனவே இரு தரப்பினரையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் , 20 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , செல்வதற்கு அனுமதித்ததுடன் , இரு தரப்பினரும் தமக்கு இடையில் எந்த தொடர்பும் வைத்து இருக்க கூடாது எனவும் வழக்கு முடிவடையும் வரையில் இரு தரப்பினரும் ஆலய பகுதிக்கு செல்ல கூடாது என கடும் நிபந்தனையும் நீதிவான் விதித்தார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.