மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி இன்று மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்ற கடற்படையினர் தம்மை தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்து அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் அச்சுறுத்தல்களை தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை (23) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.