யாழ்ப்பாணம் நெடுந்தீவு சிறுமி ஜேசுதாஸ் லக்சினியை படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணையானது நாளை திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சிப் பதிவிற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி கடையொன்றுக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது.
நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணையானது முடிவுறுத்தப்பட்டு வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தபப்ட்டது. அதனை தொடர்ந்து வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரத்தை யாழ். மேல் நீதிமன்றுக்கு கடந்த 2017.03.10ம் திகதி சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கின் சாட்சிப் பதிவுகளுக்காக நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான விசாரணைக்காக நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. இவ் வழக்கில் அரச தரப்பு சாட்சிகளாக பன்னிரண்டு சாட்சியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.