மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலாக் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இஷ்ரத் ஜகான் என்பவர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது எனவும் இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாவும் எனவே இந்த நடைமுறையை நீக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இந்தநிலையில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ள போதிலும் அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், இதனை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.