மலையகம் நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்த தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கபட்டுள்ளது. மலையத்தை பொறுத்தவரையில் மாகாண பாடசாலைகளே அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக தமிழ்மொழி மூலமான தேசிய பாடசாலைகள் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்காக கண்டி மாவட்டத்தில் இரண்டும்¸ மாத்தளை மாவட்டத்தில் இரண்டும்¸ பதுளை மாவட்டத்தில் இரண்டுமாக மொத்தமாக ஆறு பாடசாலைகள் மாத்திரமே காணப்படுகின்றன.
இதனை அதிகரிக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்டி மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை கண்டி மாபேரிதன்ன பிரதேசத்திலும் நுவரெலியா மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை நானுஓயாவிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலை இரத்தினபுரியிலும் அமைப்தற்கான நடவடிக்கை முன்னெடுக்கபட்டு வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைதிட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கான தேசிய பாடசாலை நானுஓயா எடின்பொரோ தோட்டத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது எனவும் களனிவெலி பெருந்தோட்ட கம்பனி இதற்கான 05 ஏக்கர் காணியினை வழங்குவதற்கும் முன் வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தினை பார்வையிடுவதற்காக கல்வி அமைச்சின் பாடசாலை கட்டட அபிவிருத்தி பிரிவின் பொறியியளாலர்கள் திட்ட வரைபுணர்கள். மத்திய மாகாண கட்டட பொறியிலாளர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் குறித்த இடத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு காணியினை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது கண்டி மாபெரிதன்னையில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 05 ஏக்கர் காணியும் நுவரெலியா மாவட்டம் நானுஒயாவில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 05 ஏக்கர் காணியும் இரத்தினபுரியில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 04 ஏக்கர் காணியும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஓதுக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது