தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டிடங்கள் என்பவற்றை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கின்ற நிலையில்தான் அவர்களது விடுதலையைப் பற்றி பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது எனவும் எம்மால் அவ்வாறு பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்ந்தும் தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் தான் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் இது குறித்தும் உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.