சௌத் கம்ஸ்ரன் புகையிரத வழித் தடத்தில், மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ பரவுகையை அடுத்து, லண்டன் யூஸ்ரன் புகையிரத நிலையத்தில் இருந்து புறநகரங்களை நோக்கிப் புறப்படும், புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று மாலை ரத்துச் செய்யப்பட்டன. இந்த தீ பரவுகையால், மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் மாலை வேளையில் தமது பணி முடிந்து இருப்பிடங்களை நோக்கி செல்லமுற்றபட்ட 10 ஆயிரம் வரையிலான பயணிகள் பாரிய அசொகரியங்களை எதிர்கொண்டதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் பாரிய புகையிரத நிலையங்கள் ஐந்தில் ஒன்றான யூஸ்ரன் புகையிரத நிலையத்தில் இருந்து, புறநகர் பகுதிகளான – பேர்மிங்காம், (வெஸ்ற் மிட்லன்ட்), லிவபூல், மில்டன் கிங்ஸ், கொவன்றி உள்ளிட்ட அனைத்து மார்க்கங்களுக்கும் செல்லும் புகையிரத சேவைகள் தடைப்பட்டதனால் இந்தப் பகுதிகள் சன நெரிசல்களால் நிரம்பிய மாலை வேளையாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நெருக்கடி நிலையை சீர்செய்வதற்கான பணியில் இறங்கியுள்ள புகையிரத சேவைகள் துறையினர் இன்று இரவுக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்து நாளை காலை புகையிரத சேவைகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதே வேளை இன்றைய மாலைப் பொழுதில் தேசிய புகையிரத சேவைகள் தடைப்பட்டமைக்கு வருத்தம் வெளியிட்டுள்ள புகையிரத துறையினர், இன்றைய புகையிரத பற்றுச்சீட்டுகளை மீள பயன்படுத்த அல்லது அதற்கான பணத்தை மீளப்பெற ஏற்பாடுகள் செய்துள்ளனர்.