பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்காதமையினால் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் அறிவித்துள்ளது.

