Home உலகம்உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: ஸ்பெயின் அணியை மிரளவைத்த 40 வயது கோல்கீப்பர் ‘வொசின்ஹா’!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: ஸ்பெயின் அணியை மிரளவைத்த 40 வயது கோல்கீப்பர் ‘வொசின்ஹா’!

by admin
உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில் ஒரு சிறிய நாடு அசுர பலம்கொண்ட அணிக்கு எதிராக நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சுமார் 6 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான கேப் வெர்டே (Cape Verde), தனது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்பெயின், கேப் வெர்டே அணியின் கோல் எல்லையை நோக்கி அலை அலையாகத் தாக்குதல்களை நடத்தியது. ஒட்டுமொத்தப் போட்டியில் 27 முறை கோல் அடிக்க முயற்சித்தும், ஸ்பெயின் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதற்கு அரணாக நின்றவர் கேப் வெர்டே அணியின் 40 வயது மூத்த கோல்கீப்பரான ஜோசிமார் டயஸ் (Josimar Dias) என்ற ‘வொசின்ஹா’ (Vozinha).
இப்போட்டியில் வொசின்ஹா 7 அதிமுக்கியமான கோல் தடுப்புகளை (Saves) மேற்கொண்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். உலகக் கிண்ண வரலாற்றில் தனது நாட்டின் அறிமுகப் போட்டியில் விளையாடிய மிக வயதான வீரர் (40 வயது 12 நாட்கள்) என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். போட்டி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததும், அவர் மைதானத்திலேயே மண்டியிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சிறுவயதில் தன்னை வளர்த்து, தற்போது உயிரோடு இல்லாத தனது தாத்தா, பாட்டியை நினைத்து அவர் அழுததாகக் கூறினார்.
அவருடைய கண்ணீருக்குப் பின்னால் மற்றொரு சோகமும் இருந்தது. அமெரிக்காவில் நடைபெறும் இந்த உலகக் கிண்ணப் போட்டியை நேரில் காண அவரது தாயாரை அழைக்க அவர் விரும்பினார். ஆனால், அமெரிக்க விசா பெறுவதற்கான கட்டணங்களுடன் கூடுதலாகச் செலுத்த வேண்டிய $15,000 (சுமார் 15 ஆயிரம் டொலர்) பிணைத் தொகையை (Bond) சரியான நேரத்தில் திரட்ட முடியாததால், விசா கிடைக்காமல் அவரது தாயாரால் மைதானத்திற்கு வர முடியவில்லை.
25 வயதில்தான் தொழில்முறை காற்பந்து விளையாடத் தொடங்கி, பல தடைகளையும் கடந்து 40 வயதில் உலகக் கிண்ணக் கனவை நனவாக்கிய வொசின்ஹாவின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வெறும் 50,000 ஆக இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கை, ஒரே நாளில் மில்லியன்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More