கிழக்கு மாகாணத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்த போதிலும் வளப்பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பலருடைய திறமைகள் மழுங்கடிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏற்கனவே யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு முன்னுரிமையளிக்காமல் தொடர்ச்சியாக முன்னணியிலுள்ள மாகாணங்களுக்கே வளங்கள் வழங்கப்படுவதினூடாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.
தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண வீர வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் தேசிய ரீதியிலான விளையாட்டு மைதானமொன்று இல்லாமை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு அதுபாரிய இழப்பாகும் என்பதுடன் சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டரங்கொன்று கிழக்கில் உருவாக்கப்படுவது அத்தியவசியமானது எனவும் அதன் மூலம் பல ஆற்றல் உள்ள இளைஞர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிழக்கிலேயே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது மாகாணத்தில் பாடசாலைகளில் விளையாட்டுத் துறையில் திறமைகளை வெளிப்படுத்தும் பல மாணவர்கள் வாழ்வில் வறுமை தாண்டவமாடுவதை தனிப்பட்ட ரீதியில்; அறிவேன் எனத் தெரிவித்த அவர் இந்த வறுமை காரணமாக பல திறமை வாய்ந்த வீர வீராங்கனைகள் விளையாட்டுத் துறையினை இடைநடுவில் கைவிடும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே எமது மாகாணத்தில் இவ்வாறான வீரர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதால் அவர்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதிகளை மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்விற்கு கிழக்குமாகாண கல்வியமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான எஸ்,தண்டாயுதபானி இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார், அத்துடன் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ,சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம்,வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.