திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
வடக்கில் இடம்பெறும் திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை யாழ் நகரில் உருக்கி கட்டியாக்கும் மற்றும் இந்தியாவுக்கு நகைகளை கடத்தும் குழுக்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பொலிசார் தொடர்புகளை பேணி வந்துள்ளனர்.
அந்த தொடர்பின் மூலம் திருட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவினரின் செயல்களுக்கு பாதுகாப்பாகவும் உடந்தையாகவும் குறித்த போலீசார் செயற்பட்டு உள்ளனர். அதற்காக திருட்டு நகைகளில் ஒரு பகுதியினை கப்பமாகவும் பெற்று வந்துள்ளனர்.
அந்நிலையில் தீடிரென , நீதிவான் ஒருவருக்கும் திருடுட்டு நகைகளில் பங்கு கொடுக்க வேண்டும் என கோரி போலீசார் நகைகளில் பங்கினை அதிகமாக கேட்டு உள்ளனர். இதனால் போலீசாருக்கும் திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.
அதனை அடுத்து திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை பெற்று தருவோம் என மிரட்டியுள்ளனர்.
அது தொடர்பில் திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவை சேர்ந்த ஒருவர் யாழ்.பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிட்டு உள்ளார். அதன் போது அவரை பொலிஸ் உப பரிசோதகர் தொலைபேசியில் கப்பம் கேட்டு மிரட்டும் ஒலிப்பதிவையும் கையளித்து உள்ளார்.
அதை தொடர்ந்து குறித்த பொலிஸ் உயர் அதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டது. அந்நிலையில் நேற்று முன்தினம் 3 நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரி முன்பாக சாட்சியம் அளித்துள்ளனர். அதன் போது குறித்த பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட மூன்று போலீசாருக்கும் இதுவரை காலமும் கொடுத்த நகைகளின் அளவு மற்றும் ரொக்க பணத்தின் விபரங்களையும் தெரிவித்து உள்ளனர்.
அதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 10 பவுண் தங்க நகைகளும் , 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
அதேவேளை வடக்கில் இடம்பெறும் திருட்டுக்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பொலிசாருக்கும் தொடர்புகள் உள்ளதாகவும், அவர்களிடம் இருந்தும் பெரும் தொகையான திருட்டு நகைகளை பெற்றுக்கொண்டு உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.