அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறாது எனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வேலை நிறுத்தம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து சிறுநீரக சிகிச்சை நிறுவனங்கள், நாடு முழுவதுமுள்ள விபத்துப்பிரிவுகள் என்பவற்றை பாதிக்காது என்றும் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அடையாள வேலைநிறுத்தம் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடையும் எனவும் எதிர்வரும் 09 ஆம் திகதிக்குள் சைட்டம் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதுபோனால் ஏனைய துறைகளையும் உள்ளடக்கியதாக இவ்வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுமெனவும் என அவர் தெரிவித்துள்ளார்.