பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கான ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்த போது இதில், இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டதோடு, அவர்களின் உடமைகளும் சூறையாடப்பட்டன.
இந்தச் சம்பவத்தின்போது, பில்கிஸ் பானோ என்ற பெண்ணை, 11 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்தப் பெண்ணின், குடும்பத்தினரைக் கொடூரமாகக் கொலையும் செய்திருந்தனர். இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில், மும்பை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 2008ம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன் மேலும், 5 போலீசார், மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என்றும் அறிவித்தது.
இந்தநிலையில் ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் 11 பேர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளிகள்
பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 5 போலீசார், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டையும் உறுதி செய்த நீதிமன்றம், அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்துள்ள அதேசமயம் இந்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, சிபிஐ தாக்கல் செய்திருந்த மனுவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.