உலகின் புகழ் பூத்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனாவையும் பார்சிலோனா கழகத்தையும் மெஸ்ஸி பிரதிநிதித்துவம் செய்கின்றார். கடந்த மார்ச் மாதம் ச்சிலி அணிக்கு எதிரான போட்டியின் போது துணை நடுவரை தூற்றியதாக மெஸ்ஸி மீது குற்றம் சுமத்தி நான்கு போட்டித் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த போட்டித் தடைகள் காரணமாக உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் பங்கேற்று வரும் ஆர்ஜன்டீனா மெஸ்ஸி இன்றியே போட்டிகளில் பங்கேற்று வருகின்றது. குறிப்பாக பொலிவிய அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வியைத் தழுவியது.
போட்டித் தடைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலனை செய்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை போட்டித் தடையை நீக்க தீர்மானித்துள்ளதுடக் 10,000 சுவிஸ் பிராங் அபராதமும் நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் மெஸ்ஸி, ஆர்ஜன்டீன அணிக்காக விளையாட உள்ளார்.