காஷ்மீரில் நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக அரசியல் தலையீடு தேவை என ராணுவ அதிகாரிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கெடுபிடிகள் எதையும் தளர்த்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாதுகாப்புக் கெடுபிடிகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் தலையீடு அவசரமாகத் தேவைப்படுகிறது. அப்போதுதான், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்றார்.
காஷ்மீரில் நாளுக்குநாள் நிலவரம் மோசமடைந்து வருகிறது. பள்ளிச் சிறார்கள்கூட பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர் என்று கூறும் மற்றுமொரு ராணுவ அதிகாரி, அரசியல் தீர்வே சரி என்கிறார்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ அரசியல் தீர்வு குறித்து எவ்வித முன்முயற்சியும் செய்யாமல் சுணக்கம் காட்டுகிறது. பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா போன்ற மூத்த தலைவர்கள் பலரும் காஷ்மீர் பிரச்சினையில் அரசியல் தலையீட்டை வலியுறுதியமைக்காக இன்றளவும் தலைமையின் அதிருப்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழையாமை’
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுவரை ராணுவத்துக்கு தீவிரவாதிகள் குறித்து துப்பு கொடுத்துவந்த உள்ளூர்வாசிகள் தற்போது முற்றிலுமாக அதை தவிர்த்துவிட்டதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உள்ளூர்வாசிகள் துப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதுநாள்வரை சினேகமாக இருந்த கிராமத்தினர்கூட இப்போது எங்களுக்கு உதவுவதிலை. நம்பத்தகுந்த தகவல் இல்லாததால் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர்” என ஓர் அதிகாரி கூறினார்.
பள்ளி மாணவர்கள்கூட கல்வீச்சுச் சம்பவங்களில் ஈடுபடும் நிலையில் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் பலரும் கூறுகின்றனர்.