பல்வேறு வழிகளில் வடிவங்களில் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசம் என்ற வகையில் கடந்த கால இருண்ட சூழ்நிலையை மீள உருவாக்க இடமளிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள அவர் தற்காலத்து பிரிவினைவாதம் பல்வேறு வழிகளில் தலைதூக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்தியாகத்துடன் நிலைநாட்டப்பட்ட தாய் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடப்படாகும் எனவும் தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான விடயங்களுக்கு அதி உச்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இல்லாதொழிக்கப்பட்டது எனவும் அதனையே கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும், தமிழீழ விடுதுலைப் புலிகள் மீளவும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் கிடையாது என மறுதலித்துவிட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் படைவீரர்களுக்கு நன்றிக்கடன் உடையவர்கள் எனவும் கோதபாய குறிப்பிட்டுள்ளார்.