காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2015 ஆண்டில் தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு தன்னுடன் இருந்த இந்த பிள்ளை காணாமல் போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகுமெனவும், அவ்வாறான காணாமல் போதல் இடம்பெற்றிருந்தால் அந்த பிள்ளைகளை தேடுவதற்காக தானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய இருந்ததாகவும், தன்னை வர விட முடியாதென வடக்கில் எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தையும் நினைவூட்டிய ஜனாதிபதி , அன்றைய தினம் தான் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி , பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தான் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை தான் தாமதப்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.