ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால் தடைநீக்கப்பட்ட இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சப்ஸார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் நேற்றையதினம் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதல்களில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றையதினம் நீக்கப்பட்ட நிலையில், வன்முறை மீண்டும் பரவத் தொடங்கியதால் இணையதள சேவைகளுக்கு அரசு மீண்டும் தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.