சென்னை ஐஐடி வளாகத்தின் முன் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் சென்னை ஐஐடியில் முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.
இதன்போது சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதனால் கடுமையான காயங்களுக்குள்ளாகிய சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்த ஐஐடி முன் திரள முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐஐடி வளாகத்தின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.