பயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடையாகக் காணப்படும் மனித உரிமைகள் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொதுத் தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே பயங்கரவாத சந்தேகநபர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்கரவாத சந்தேகநபர்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கவும், அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அவர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைகள் சட்டம் தடையாக இருக்கும் பட்சத்தில், நாம் அந்த சட்டங்களை மாற்றி அமைப்போம் எனவும் தெரிவித்தார்.
மன்செஸ்டர் மற்றும் லண்டனில் அண்மைக் காலமாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாகவே அவரது கருத்து இவ்வாறு அமைந்துள்ளது.