யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நினைவு கூர்வதற்கும் வடக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென எழுத்து மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும் இவ்வாறான நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்வுகளை தடையின்றி நடாத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதியிடம் மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.