178
வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது.
வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் ஆரம்பமானது. வடமாகாண சபையின் கடந்த 14ஆம் திகதி அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அன்றிரவு அவைத்தலைவர் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன் ஆளூநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக அரசியல் பரப்புக்கு பின்னர் நேற்றைய தினம் மாலை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீள பெறப்பட்டதையடுத்து பரபரப்புக்கள் அடங்கி போனது.
அந்நிலையில் இன்றைய தினம் மாகாண சபை அமர்வு பலத்த எதிர்பார்ப்புகள் மத்தியில் கூடியது.
இருந்த போதிலும் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் சபை அமர்வை ஆரம்பித்தவுடன் நகை அடகு நியதி சட்டம் தொடர்பான குழு விவாதத்தை ஆரம்பித்து சபை அமர்வுகள் மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
எந்த ஒரு உறுப்பினரும் கடந்த கால அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்க வில்லை. இதேவேளை அமைச்சர்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து சபையில் ஆசன ஒழுங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சபையின் முன் ஆசனங்களில் முதலவாக முதலமைச்சர், கல்வி அமைச்சர் , சுகாதார அமைச்சர் , விவசாய அமைச்சர் , மீன் பிடி அமைச்சர் , பிரதி அவைத்தலைவர் எனும் ஒழுங்கில் அமைந்திருந்தது.
இன்றைய அமர்வில் முதலமைச்சர் , சுகாதார அமைச்சர் , மீன் பிடி அமைச்சர் , பிரதி அவைத்தலைவர் , முன்னாள் கல்வி அமைச்சர் , முன்னாள் விவசாய அமைச்சர் என ஆசன ஒழுங்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
Spread the love