யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவிதத்தில் புனரமைத்துத் தரவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் மயிலிட்டி துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதற்கு தமது வரவேற்பைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.
எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளதானது கடற்தொழில் ஈடுபடும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டித்துறைமுகத்தை படையினர் விடுவிப்பதுடன் தையிட்டி வடக்கு ஜே/249 கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியை மக்களின் பாவனைக்காக விரைவில் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.