தமிழக விவசாயிகள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் விவசாயிகள் பல்வேறு விதங்களில் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.
அதன்பின் மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஜுன் 9ம் திகதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இருப்பினும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடாமல் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்தததை தொடர்ந்து, விவசாயிகள் சென்னை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் போராடுவதற்காக விவசாயிகள் டெல்லி சென்றடைந்துள்ளனர்.