இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு எதிரிகளுக்கு பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பில்லை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

புங்குடுதீவு  மாணவி படுகொலை இன, மத முரண்பாட்டை தோற்றுவிற்க மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் வந்தமையால் தான் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை செய்தோம். என குற்ற புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா  நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  இன்றைய தினம்  வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில்  6 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியனகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
அதேவேளை இன்றைய தினம் முதல் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன தான் எட்டாவது எதிரி தரப்பிலும் முன்னிலை ஆவதாக மன்றில் தெரிவித்து இன்றைய தினம் எட்டாவது எதிரி தரப்பிலும் மன்றில் முன்னிலையானார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்  ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.

குறித்த வழக்கின் 42 ஆவது சாட்சியமான குற்ற புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா சாட்சியம் அளிக்கையில் ,

மாணவி கொலை தொடர்பான விசாரணைக்காக யாழ்ப்பாணம் விரைந்தேன். 

நான் தற்போது காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை பிரிவில் கடமையாற்றுகிறேன். குற்றபுலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றினேன். 2015ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இரவு யாழ்ப்பணத்தில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் செல்லுமாறு எனக்கு எனது மேலதிகாரி உத்தரவு இட்டார்.
அதன் பிரகாரம் ,மறுநாள் (20 ஆம் திகதி) காலை குற்றபுலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்தசில்வா ,  உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவீர , உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ன உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு மதியம் 2. 20 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன்.
அன்றைய தினம் யாழ்ப்பணத்திற்கு வரும் போது வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு இருந்தன, கற்கள் பொல்லுகள் வீதிகளில் சிதறி காணப்பட்டன.
யாழ்ப்பணத்திற்கு வந்த நான் முதலில் யாழ்.பொலிஸ் நிலையம் சென்று அங்கு அப்போதைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரியவை சந்தித்தேன். அப்போது சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி சென்றமை தொடர்பில் வினாவினேன்.
அதற்கு அவர் , 18ஆம் திகதி குறித்த சந்தேக நபர் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார் எனவும் , அதன் பின்னர் அவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்து விட்டு அவரை விடுவித்ததாகவும் கூறினார்.
சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பில் வாக்கு மூலங்களை பெற்றோம். 
அதனை தொடர்ந்து அன்றைய தினமே (20ஆம் திகதி) யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய , உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் , மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களான அசோக , குணபால , அன்பழகன் , தேசபிரிய ஆகியோரிடம் ஒன்பதாவது சந்தேக நபர் தப்பி சென்றமை தொடர்பில் , வாக்கு மூலங்களை பதிவு செய்தோம்.
மறுநாள் (21ஆம் திகதி) ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை போலீசார் அசாதரணமான செயற்பாடு ஊடாக நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
சுவிஸ் குமார் அசாதாரணமான முறையில் மன்றில் முற்படுத்தப்பட்டார். 
அதாவது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் முன்னே வர பின்னால் வாகன தொடரணி ஒன்று வந்தது. ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு , நீதிமன்ற வாளகத்தினுள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார ஆகியோர் சுவிஸ் குமாரை அழைத்து சென்று நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.
சாதரணமாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு , பொறுப்பதிகாரியே நீதிமன்றில் முற்படுத்துவார்.
அன்றைய தினமே (21ஆம் திகதி) நாம் மாணவியின் தாயாரிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம்.  சம்பவம் தொடர்பில் அதுவரை நடைபெற்ற விசாரணைகளின் போக்கு தொடர்பிலும் , விசாரணைகளை மேற்கொண்ட போலீசாரிடம் வாக்கு மூலங்களை பெறவும் , அது தொடர்பிலான ஆவணங்களை பெறவும் , பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு அறிவுறுத்தினேன்.
குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதியை ஒன்றரை மணித்தியாலம் பார்வையிட்டேன். 
மறுநாள் (22ஆம் திகதி) ஊர்காவற்துறை சென்று குற்றசம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று அவதான குறிப்புக்களை மேற்கொண்டேன். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அந்த இடத்தினை சூழ பார்வையிட்டேன்.
பின்னர் 26ஆம் திகதி வவுனியா சிறைச்சாலைக்கு சென்று அங்கே தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடமும் தனித்தனியே வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பில் சட்டபீடாதிபதி வீ.ரி.தமிழ்மாறன் மற்றும் அவருடைய மகள் ஆகியோரிடமும் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை. 
அதன் பின்னர் சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை ஆவண செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதியிடம் அனுமதி பெற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடன் முதலில் 30 நாட்கள் குற்றபுலனாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் சந்தேக நபர்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுத்தோம். அந்த 30 நாட்கள் முடிவடைய கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர்களை முற்படுத்தி மேலும் 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வாங்கினோம்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து 60 நாட்கள் விசாரணைகளை மேற்கொண்டதில், அவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து அவர்களை மீண்டும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தொடர் விசாரணைக்கு உட்படுத்தினோம்.
சந்தேக நபர்களிடம் குற்றபுலனாய்வு திணைக்களம் ஒன்பது மாதங்கள் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. என பிரதான விசாரணையின் போது சாட்சியம் அளித்தார்.
குறுக்கு விசாரணை.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன சாட்சியிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்ட போது ,
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சான்று பொருட்கள் எதாவது கைப்பற்றப்பட்டதா ?
பதில் :- ஆம்.  7ஆம் எதிரி வீட்டில் இருந்து 4 கைத்தொலைபேசிகளை கைப்பற்றி இருந்தோம்.
கேள்வி :-  வேறு எதுவும் சான்று பொருளாக கைப்பற்றப்படவில்லையா ?
பதில் :- கைப்பற்றப்பட்டது. மடிக்கணணி ஒன்றும் 8 கையடக்க தொலைபேசிகளும்.
கேள்வி :- அவை யாருடையது ?
பதில் :- அவற்றை பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவே கைப்பற்றியது. அது தொடர்பிலான முழு விபரமும் நிஷாந்த சில்வாவிடம் உள்ளது.
கேள்வி :- கைப்பற்றப்பட்ட மடிக்கணணி மற்றும் கையடக்க தொலைபேசிகளை தொழிநுட்ப விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா ?
பதில் :- ஆம். அதனை ஆய்வுக்கு உட்படுத்த மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் , சேட் எனும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கபப்ட்டது. அதில் உள்ள ஒலி மற்றும் ஒளி பதிவுகளை பரிசோதிக்க. அது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடனேயே அனுப்பி வைக்கப்பட்டது.
கேள்வி :- கைத்தொலைபேசி மூலம் எதிரிகள் சம்பவ தினத்தன்று எங்கு நின்றார்கள் என்பது தொடர்பில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா ?
பதில் :- தகவல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அது தொடர்பான பூரண தகவல்கள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிடம் உள்ளது.
கேள்வி :- சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க காரணம் ?
பதில் :- சடலம் கிடந்த நிலையினை பார்த்த போது , மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது போன்று காணப்பட்டது. அதனால் இது இன , மத முரண்பாட்டை தோற்றுவிற்கும் முகமாக புரியப்பட்ட குற்ற சம்பவமாக இருக்கலாம் என மிக உறுதியான சந்தேகம் எழுந்தமையால் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்தோம்.
கேள்வி :- மாணவிக்கும் , சந்தேக நபர்களுக்கும் இடையில் இன , மத வேறுபாடுகள் காணப்பட்டனவா ?
பதில் :- இல்லை. சடலம் கிடந்த நிலையினை பார்த்த போது எமக்கு இன, மத முரண்பாட்டை தோற்றுவிற்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட குற்ற செயலாக தோன்றியது.
கேள்வி :- சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க தடைகள் எதுவும் ஏற்பட்டதா ?
பதில் :- தடைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தமையினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டோம்.
கேள்வி :- உங்கள் விசாரணைகளில் சந்தேக நபர்கள் இலஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தனவா ?
பதில் :- விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இப்ரான் எனும் சந்தேக நபரிடம் பெறபட்ட வாக்கு மூலத்தில் ஒன்பதாது சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார் என்பவர், தானும்,  தனது சகோதரான நான்காவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரனும் அரச தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாகவும் அதற்கு பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா உதவி புரிந்தால் அவருக்கு 20 மில்லியன் ரூபாய் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தன்னிடம் சுவிஸ் குமார் கூறியதாக கூறி இருந்தார்.
கேள்வி :- அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதா ?
பதில் :- இல்லை.
கேள்வி :- சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை நீர் வாசித்தீரா ?
பதில் :- இல்லை. நான் மேற்பார்வை அலுவலகராக மாத்திரமே. இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த அதே கால பகுதியில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை , ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் உபாலி தென்ன கோன் தாக்கப்பட்டமை தொடர்பில் , அமைச்சர் ரவிகருணா நாயக்கவின் ஊர்வலம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் , அவன்கார்ட் விசாரணை என பல விசாரணைகளின் மேற்பார்வை அதிகாரியாக செயற்பட்டேன். அதனால் இந்த சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை நான் வாசிக்கவில்லை. இந்த விசாரணைகளை எனது ஆலோசனை அறிவுத்தல்களின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவே மேற்கொண்டார். என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து , 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 6ஆம் ,மற்றும் 8ஆம்  எதிரிகள் தரப்பில் நான் சொல்கிறேன் ,  இலங்கையில் மிக பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள கூறிவிட்டு நீர் இந்த வழக்கில் இருந்து ஒதுங்கி கொண்டு விட்டீர் என, எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன கூறினார்.
அதற்கு சாட்சியமளித்தவர், இதனை நான் முற்றாக மறுக்கிறேன். நான் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்தோம் என ஏற்கனவே சாட்சியத்தில் குறிப்பிட்டு விட்டேன். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணையின் போது , தலைமை விசாரணை அதிகாரி சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை வாசிக்க வில்லை எனில் நீர் உமது கடமையை சரியாக செய்யவில்லை. என எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
அதற்கு சாட்சியம் அளித்தவர் , இதனை நான் முற்றாக மறுக்கிறேன். எனக்கு எனது கடமை குறித்து தெரியும். அது தொடர்பில் தெளிவாக அறிந்து வைத்து இருக்கிறேன். எந்த தடை வந்தாலும் நான் எனது கடமையை சரியாக செய்வேன். என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து , குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது.
பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சியம் திங்கட்கிழமை.
அதேவேளை இன்றைய தினம் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்ட 35ஆவது சாட்சியமான குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா குறித்த வழக்கின் பிரதான விசாரணை அதிகாரி என்பதனால் அவருடைய சாட்சியத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும் எனும் காரணத்தால் அவரை எதிர்வரும் திங்கட்கிழமை சாட்சி அளிக்க அனுமதிக்குமாறும்
அத்துடன் நேற்றைய புதன்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழை திங்கட்கிழமை மதியம் வருமாறு மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதனை அன்றைய தினம்(திங்கட்கிழமை)  காலை நீதிவானை வருமாறு கோருமாறும் , 24ஆவது சாட்சியத்திற்கும் அழைப்பாணை விடுக்குமாறும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏற்றுக்கொண்டது.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கபப்ட்டது. அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.