இன்று மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்திலுள்ள காயான்மடு பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை கண்டு ஆற்றில் குதித்த 17 வயது இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமுற்ற பொது மக்களால் சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேற முடியாதவாறு வாகனத்ததுடன் தடுத்ததால் அந்த பகுதியில் ஓரிரு மணித்தியாலங்கள் பதட்டம் நிலவியது .
அந்தப் பகுதியிலுள்ள முந்தன்வெளி ஆற்றில் மணல் எடுப்பதற்கு சிலருக்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் நிபந்தனைகளை மீறி ஒரு சிலர் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று நண்பகல் அப்பகுதிக்கு சென்றிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் ஆற்றில் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றுவதை அவதானித்து ஆட்களை கலைப்பதற்கு துப்பாக்கியால் வானத்தினை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனால் அச்சமடைந்த இந்த இளைஞர் ஆற்றில் குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் குதித்த இளைஞனை காப்பாற்ற குதித்த அவரது சகோதரர் ஏனையோரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனையடுத்து பொது மக்களை கலைப்பதற்காக போலீஸாராலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் வானத்தில் துப்பாக்கியால் சுட்டு மக்கள் கலைந்ததும் தடுத்து வைக்கப்பட்டிருந்த படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் போது ஆற்றில் குதித்த இளைஞன் பலி:
Jul 24, 2017 @ 11:21
மட்டக்களப்பு, கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் இன்று திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்த விசேட அதிரடிப்படை வீரரை பொதுமக்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லுமாறு பொதுமக்கள் கூறியதையடுத்து, பொலிஸாருக்கும் பொதுக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.