216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வடக்கு மாகாணமும் கடும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபை வறட்சியினால் அதிகம் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள கிராமங்களுக்கு நீர்த் தாங்கி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் குடிநீர் விநியோகத்திற்கு நீரை பெற்றுக்கொள்வதற்கு கரைச்சி பிரதேச சபையும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என அதன் செயலாளா் க. கம்சநாதன் தொிவித்துள்ளாா்.
கரைச்சி பிரதேச சபை செருக்கன் கிராமத்திற்கு இரண்டு நாளுக்கு ஒரு தடவையும், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் கிராமங்களுக்கு ஒன்று விட்டு ஒரு நாளைக்கும் என நீர் விநியோக நடவடிக்கைகளில ஈடுப்பட்டு வருகிறது. இதற்கான நாளாந்தம் 24 லீற்றர் நீர் இரண்டு கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.
கரைச்சி பிரதேச சபையின் கிணறு மற்றும் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்கள கிணறு என்பற்றில் இருந்தே நீர் பெறப்படுகிறது. ஆனால் கரைச்சி பிரதேச சபை கிணற்றில் நீர் வெகுவாக வற்றிய நிலையில் கிணற்றின் அடி மட்டத்திற்குச் சென்றுள்ளது. நான்காயிரம் லீற்றர் நீரை பெறுவதற்கு சுமாா் நான்கு மணித்தியாலயங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் இன்னும் சில நாட்கள் மட்டுமே அவ்வாறு அலுவலக கிணற்றில் நீரை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் கம்சநாதன் தெரிவித்துள்ளாா்.
அத்தோடு தொடர்ச்சியாக இவ்வாறு வறட்சி நிலவினால் மக்களுக்கு விநியோகிப்பதற்கு கரைச்சி பிரதேச சபையினாலும் புதிய நீர் மூலங்களை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆனால் கிளிநொச்சியில் அதிக தொலைவில் இல்லாது வேறு நீர் மூலங்களை அடையாளம் காணப்பது அரிதான விடயம் என்றும் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் சுட்டிக்காட்டியதோடு, இனிவரும் நாட்களில் தனியாாின் கிணறுகளில் அவா்களின் சம்மதத்துடன் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
Spread the love