228
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது.
இதில் முதலாம் இடம் களுத்துறையைச் சேர்ந்த விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளாா்.
தனியே பயிர்ச்செய்கை மட்டுமன்றி மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதோடு, இயற்கை முறை பசளை பயன்பாட்டினை அதிகமாக பயன்படுத்துகின்ற விவசாய நடவடிக்கைகளை அதிகம் மேற்கொள்கின்றாா்
இதற்கு முன்னரும் இராஜகோபால் விவசாயத்திற்காக நான்கு தடவைகள் பல சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் தற்போது மிகவும் வறட்சியான காலநிலை தொடர்கின்ற போது இராஜகோபாலின் காணி பசுமையாக காணப்படுகிறது. மரக்கறிகள்,பழவகைள், உள்ளிட்ட பல்வேறு விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றாா்.
தனதும் தனது குடும்ப அங்கத்தவா்களின் உழைப்பின் மூலம் மாத்திரமே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இராஜகோபால் தான் சந்திக்கும் நெருக்கடியாக சந்தையில் விவசாயிகள் எந்த உற்பத்தி பொருட்களை கொண்டு சென்றாலும் பத்துக்கு ஒன்று கழிவு எடுப்பதை மிகவும் மனவருத்ததுடன் கூறுகின்றாா்.
அதிகளவு உடல் உழைப்பை செலுத்தி பல மாதங்கள் விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டு உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கின்ற போது இடைத்தரகர்கள் பத்து கிலோவுக்கு ஒரு கிலோ கழிவாக எடுக்கின்றனா். இது விவசாயிகளுக்கு ஒரு சாபக்கேடு என சுட்டிக்காட்டும் அவா் உதாரணமாக தரமான பச்சை மிளகாய், நூறு கிலோ கிராம் சந்தைக்கு கொண்டு சென்றால் அங்கு பத்து கிலோ கழிவாக பெறப்படுகிறது, இதன்போது தங்களின் மனம் வெதும்புகிறது எனவும் இது மிகவும் அநீதியானது என்றும் குறிப்பிடுகின்றாா்.
எனவே அவா் விவசாயிகள் சார்பாக பத்து ஒன்று என்ற கழிவு முறையை நடைமுறையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love