குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமானால், காத்திரமான அதிகாரப் பகிர்வு அவசியம், என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள கரிசனை வெறுமனே பொருளாதார, தந்திரோபாய ரீதியானதல்ல எனவும், அண்டை நாடு என்ற மெய்யான உணர்வின் அடிப்படையிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை இந்திய உடன்படிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கைச்சாத்திடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும், என்ற எதிர்க் கட்சித் தலைவர் திரு. சம்பந்தனின் கருத்து ஏற்புடையதல்ல. இந்திய ஆட்சியாளர்களைக் குளிர்விக்க இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பாரோ, தெரியவில்லை? ஒரு பழுத்த அரசியல்வாதியான இவர் அனுமானங்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைப்பது, பொருத்தமில்லை.
இப்படி ஒரு கருத்தை முன்வைக்குக் இவரால், பண்டா- செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் என்றோ இனப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கலாம், என்று கூற முடியுமா? அதிகம் ஏன், விடுதலைப் புலிகள் அமைப்பானது நயவஞ்சகமாகக் அழிக்கப்படாதிருந்தால், இனப்பிரச்சனைக்கான தீர்வை என்றோ எட்டியிருக்கலாமென்று ஒருவர் கூறினால், அதைத்தான் மறுக்க முடியுமா? இவை மட்டுமன்றி, சிறிதாகவும், பெரிதாகவும் பல ஒப்பந்தங்கள் பலராலும் பல சந்தர்ப்பங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவை எவையுமே நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, இன- மதச் சிங்கள பேரினவாதிகளே காரணமென்பதை அறியாதோரும் உளரோ?
இலங்கை தரப்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அன்றைய ஜனாதிபதி திரு. JR.ஜெயவர்த்தனவே, கையொப்பமிட்ட கையோடு அதற்கு எதிரான கருத்தைத்தான் முன்வைத்தார். ஆக, அன்று இலங்கையும், இந்தியாவும் கூடிக் கழுத்தறுக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டிருந்தனர், என்பது இரகசியமல்ல!