200
எனது ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் அழுத்தம் திருத்தமான கூற்றாகும். நாட்டின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வலுவை அவருடைய கூற்று சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள விசேட தன்மை இதன் மூலம் புலனாகியிருக்கின்றது.
இருப்பினும், ஜனாதிபதியின் இந்தக் கூற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என்பதே முக்கிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் குறித்து எழுந்துள்ள இந்த அரசியல் சூழல் கவலைக்குரியதாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இது மிக மோசமான ஒரு பின்னடைவாகவே நோக்கப்பட வேண்டும்.
ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முக்கிய பங்கேற்று செயற்பட்டிருந்தார். இந்த அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்ச்pனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்பது அவருடைய அரசியல் கனவு. அது அவஐடய அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதன் ஊடாகவே ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பது பொதுவானதொரு நிலைப்பாடு. தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்காக பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆயினும் அந்த ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அரச தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படவில்லை மாறாக அந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அல்லது கிடப்பில் போடப்பட்டன. இதன் காரணமாகவே அரசியலமைப்பில் உரிய மாற்றங்களைச் செய்து, அதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
சர்வாதிகாரப் போக்கிற்கு முடிவு காண வேண்டும் என்ற உணர்வு
இராணுவ ரீதியாகப் பலம் பொருந்தியவர்களாக விளங்கிய விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடியாது. அது இலகுவான காரியமல்ல என்று உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும்கூட கருதப்பட்டது. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடாகத் திரித்துக் காட்டி, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி, பல நாடுகளின் உதவியோடு, யுத்தத்தில் வெற்றிபெற்று அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
வெல்லமுடியாது என்று கருதப்பட்ட யுத்தத்தில் அடைந்த வெற்றியை அவர் முழுக்க முழுக்க தனது சுய அரசியல் இலாபத்தி;ற்காகவே பயன்படுத்தினார். அந்த யுத்த வெற்றியை அரசியல் முதலீடாகக் கொண்டு நாட்டில் ஒரு சக்கரவர்த்தியைப் போல ஆட்சியில் நிலைத்து நிற்பதற்கு அவர் ஆசைப்பட்டிருந்தார். அந்த ஆசையின் காரணமாக அவர் மேற்கொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்காக புதிய அரிசயலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்ற அரசியல் தேவையை நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் உணர்ந்தார்கள்.
அதேவேளை, சர்வாதிகார போக்கைக் கொண்ட முன்னைய அரசாங்கத்தை மாற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டி, நாட்டில் நல்லதோர் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். இந்த நிலையிலேயே அவர்களுடைய முயற்சிகளுக்கு தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவும், அரசியல் ரீதியாக அவர்களுடன் நெருங்கி ஒத்துழைப்பதற்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்து, அதன் அடிப்படையில் செயற்பட்டார். இந்த நிலையில், நாட்டின் தேசிய சிறுபான்மை இன மக்களும் பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களும் ஆதரவளித்ததன் காரணமாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன ஒன்றிணைந்ததையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது.
முக்கிய நடவடிக்கை
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற முக்கியமான மூன்று நோக்கங்களின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இத்தகைய பின்னணியிலேயே அரசியல் தீர்வு காணப்படும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய எதிர்பார்ப்பு அமைந்திருக்கின்றது.
இதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே அதாவது – 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று அவர் நம்பிக்கையோடு கூறியிருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இருந்ததும் சம்பந்தனின் நம்பிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயற்படுவது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் தமக்குள் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டிருந்தன என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த வகையில்,, இந்த வருடம் – 2017 ஆம் ஆண்டு இறுதியில் அந்தக் கட்சிகளுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது.
இழுத்தடிப்பா….?
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்திருக்கின்ற போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் கூட்டு எதிரணியினர் அல்லது பொது எதிரணியினர் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் தனியொரு குழுவாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் . அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் வழிநடத்தல் குழு முக்கியமானது. இந்தக் குழுவில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழுவின் ஒன்றிணைந்த சீரான செயற்பாடுகளுக்கு பொது எதிரணியைச் சேர்ந்தவர்களினால் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உபகுழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான முன்னோடி வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் – அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் இழுத்தடிப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாமதத்தைப் பல்வேறு தரப்பினரும் கருதுகின்றார்கள்.
அரசாங்கத்தின் ஆயுட்காலம்
இத்தகைய ஒரு நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட் காலம் குறித்த கேள்வி இப்போது எழுந்திருக்கின்றது. மகிந்தவின் ஆதரவாளர்களை உள்ளடக்கிய குழுவினர், வேறு சில ஆதரவாளர்களின் உதவியுடன். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்முடன் இணைத்துக்கொண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்கப் போவதாகக் கூறுகின்றார்கள். இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு நிலைமை உருவாகுமானால், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தேசிய சிறுபான்மை இனக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு அல்ல, அதன் ஆட்சிக்காலமாகிய ஐந்து வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது என்று அரசியல் ரீதியான சூளுரையும், ஆளும் தரப்பினரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றது.
இரண்டு பிரதான கட்சிகளின் இரண்டு வருட கால ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது, அதனைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நல்லாட்சி அரசாங்கம் ஒர் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இரண்டு கட்சிகளைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து ஆட்சியைக் கொண்டு நடத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் ஆளும் தரப்பினர் வெளியிடடிருக்கின்றார்கள். மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு இப்போதைய சூழ் நிலையில் உறுதியான பதிலைக் காண முடியவில்லை. இந்த நிலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியும், அதனோடு இணைந்த – இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் முயற்சியும் கேள்வி குறிக்குள்ளேயே சிக்கியிருக்கின்றன.
திம்பு பேச்சுக்களும் பின்னணியும்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை இந்தியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் வெளி அழுத்தங்களுக்கு உட்பட்டு செயற்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் இந்தியாh நீண்ட காலமாகவே இலங்கை விவகாரத்தி;ல் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. அதேவேளை நோர்வேயும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராகச் செயற்பட்டிருந்தது.
மிதவாத அரசியல் தலைமைகளின் சாத்வீகப் போராட்டங்களும், அரச தரப்பினருடனான நேரடி பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் தோலிவியில் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்கள் தனியொரு தேசமாகப் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தபோது, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனிநாட்டு கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை தந்தை செல்வநாயகத்தின் வழி நடத்தலில் செயற்பட்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள், தந்;தை செல்வநாயகத்தின் மறைவையடுத்து, தமிழ் இளைஞர்களின் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட இளையோரின் எழுச்சி, ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளுக்கு வித்திட்டிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதப் போராட்டம் தனது நடவடிக்கைகளை சிறுக சிறுக ஆரம்பித்திருந்த சூழலிலேயே 1981 ஆம் ஆண்டு அரசியல் தீர்வுக்காக மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் தமிழர்கள் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டது, யாழ்ப்பாண நூலகத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்கள் அரச ஆதரவுடன் தீ வைத்தார்கள். யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகியது மட்டுமல்லாமல், அந்த சம்பவத்தின்போது நூலகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் இடம்பெற்ற காடையர்களின் வெறியாட்டத்தில் உயிரிழப்பும் மோசமான சொத்திழப்புக்களும் ஏற்பட்டிருந்தன.
தொடர்ந்து 1983 ஜுலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைச் சாட்டாகக் கொண்டு, ஏற்கனவே அப்போதைய அரச தரப்பினரால் திட்டமிட்டிருந்தவாறு கொழும்பில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் மலையகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பரவியதையடுத்து, அந்தச் சம்பவங்கள் கறுப்பு ஜுலை கலவரமாகப் பெயர் பெற்றது.
இந்தப் பின்னணியிலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஓர் அரசியல் தீர்வை எட்டும் முகமாக அரச தரப்பினரையும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், தமிழீழு விடுதலைப்புலிகள், புளொட், டெலோ ஆகிய ஐந்து அமைப்பக்களுடன் மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உள்ளடக்கிய தமிழ் தரப்பினரையும் பூட்டான் நாட்டின் தலைநகராகிய திம்பு நகரில், இந்திய ஒன்றிணைத்திருந்தது.
விட்டுக்கொடுப்புக்களின் ஊடாக இருதரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் சகோதரராகிய ஹெக்டர் ஜயவர்தன தலைமையிலான அரச தரப்பினரும், தமிழர் தரப்பினரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேச்சுக்களில் ஈடுபட்டதன் காரணமாக அவர்களால் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமல் போனது. அதனால் திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தன.
மாகாண சபை நிர்வாக முறைமை
இருப்பினும் இந்தியா சோர்ந்துவிடவில்லை. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் தீவிரமானதோர் இராணுவ தாக்குதலை அரச படைகள் முன்னெடுத்தபோது, இந்தியா தனது பிராந்திய அரசியல் நலன்களை முன்னிட்டு தலையீடு செய்தது.
ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக போர்ச் சூழலில் சக்கியிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு, இந்தியா மனிதாபிமான ரீதியில் நிவாரணமாக உணவுப் பொருட்களை கடல் வழியாக அனுப்பி வைத்தது. அந்தக் கப்பல்களை இலங்கையின் கடற்படையினர் இடைமறித்ததையடுத்து, வான்வழியாக விமானங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் பூமாலை என இந்தியா பெயரிட்டிருந்தது.
இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காவிட்டால், இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று இந்தியா இலங்கைக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்ததன் அடிப்படையிலேயே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு அமைந்திருந்தது.
ஒப்பரேஷன் பூமாலையைத் தொடர்ந்து ஏற்கனவே இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்இனப்பிரச்சினைக்கு மாகாண சபை நிர்வாக முறைமையின் கீழ் ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, மாகாண மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என பெயர் பெற்றிருக்கின்றது.
இந்தியாவின் தலையீடு காரணமாகவே இலங்கை அரச தரப்பினரும் தமிழ்த்தரப்பு அரசியல் சக்திகளும் திம்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டன. அந்த முயற்சி வெற்றிபெறாத போதிலும் 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை அரசியலமைப்பில் மாகாண சபை நிர்வாக முறைமை குறித்த மாற்றங்களுக்கான திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்பும் நிராகரிப்பும்
திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மலையக மக்கள் உட்பட இலங்கையைத் தமது தாயமாக வரித்துக் கொண்டுள்ள அனைத்துத் தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் முதல் மூன்று விடயங்களையும் அரச தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
சுயநிர்ணய உரிமை என்பது, காலனித்துவ முறையில் நிர்வகிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அல்லது நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருத்தமுடையது. அது தனி அரசாக நிர்வாகம் நடத்துகின்ற நாடுகளில் வாழும் இனக்குழுமங்களுக்கு இது பொருத்தமற்றது என்ற சர்வதேச சட்டமுறைமையைச் சுட்டிக்காட்டி, அரச தரப்பினர் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்தனர்.
ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் தீர்வுக்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை மட்டத்திலான தீர்வில், இலங்கையில் வாழும் அனைத்து இனக் குழுமங்களும் சம உரிமையுடையவர்களாகவும், தமது மதம் மற்றும் கலை கலாசார பண்பாடுகளைப் பேணி நடக்கவும் வழி செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோன்று தமிழும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அதேவேளை, சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் கிழக்கு மாகாண மக்கள் தாங்கள் வடக்குடன் இணைந்திருப்பதா இல்லையா என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ற வகையில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்;டது.
புதிய ஏற்பாடுகள்
ஆனால், புதிய அரசியலமைப்பின் ஊடாகக் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்றும் அந்த மதமே உயரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்றும் ஏனைய மதங்கள் தமது உரிமைகளைப் பேண முடியும் என்றும் இதுவரையிலுமான நடவடிக்கைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது . ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஸ்டி என்ற சொல் பயன்படுத்தப்படமாட்டாது. ஆனால், அந்த தன்மைக்;கு ஒப்பான வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய ஏற்பாட்டின்படி, வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது.
ஒற்றையாட்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் ஒன்றிணைந்த நாடு என்ற கருத்தைக் கொண்ட ஒரு சிங்கள சொல் பயன்படுத்தப்படும் என்ற வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளின்போது சிக்கல்கள் ஏற்படத்தக்க வகையிலான முறையில் புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான ஏற்பாடுகள் சரத்துக்களாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் முதன்மை இடத்தை பௌத்த மதமே பெற்றிருக்கின்றது என அசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. அதேவேளை ஏனைய மதங்களும் தமது உரிமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை அந்த மதங்களைச் சார்ந்தவர்கள் பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைக்காக அங்கு பௌத்த விகாரரையொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு ஆட்சேபணை தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருப்பதனால் பௌத்த விகாரை அமைப்பதைத் தடுக்க முடியாது என நீதி;மன்றம் தீர்ப்பு வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை அந்த வழக்கில் இடம்பெற்ற சட்டரீதியான விவாதங்கள் விளக்கங்கள் குறித்த தகவல்கள் தெரியாத போதிலும், அரசியலமை;பபில் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் தெளிவானதாகவும், துல்லியமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். தெளிவற்ற சொற் பிரயோகங்கள், மேலோட்டமான பார்வையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கலாம். ஆனால் சட்ட ரீதியான விவாதங்களின் போது, அவற்றுக்கான பொருள்கோடல்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்த வல்லவையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய பல்வேறு சிக்கலான நிலைமைகளில் குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இந்தியா அல்லது வேறு ஏதாவது வெளிநாடு ஒன்றின் அனுசரணையும் அழுத்தமும் இல்லாத ஒரு செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு காத்திரமானதோர் அரசியல் தீர்வு கிட்டும் என கூறுவதற்கில்லை.
தமிழர் தரப்பும் இலங்கை அரசாங்கமும் நேரடியாக நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளும் சரி, இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு செய்யப்படுகின்ற அரசியல் தீர்வுக்கான ஏற்பாடுகளும் சரி, வெளித்தோற்றத்தில் நன்மையானதாகத் தோற்றினாலும்கூட, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வரும் என கூறுவதற்கில்லை.
வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களின் அடிப்படையில், அவைகள் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் வலுவானதொரு வெளிச்சக்தியின் துணையின்றி தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
Spread the love
1 comment
“வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களின் அடிப்படையில், அவைகள் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் வலுவானதொரு வெளிச்சக்தியின் துணையின்றி தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.”
தமிழர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தீர்வுகளைக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றி அளிக்கவில்லை. இது தமிழர்களுக்குத் துன்பங்களை தொடற்சியாக விளைவித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.
இத்துடன் ஒரு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்கள் பின்வருவனவற்றை செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழர்களை தூண்ட வேண்டும்.
1.தங்கள் வாழ்க்கை முறையை தெரிந்து, மேம்படுத்தி, பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சென்று, ஒவ்வொரு துறையிலும் தங்களை அதி உயர் நிலைக்கு நகர்த்தி, உலக செல்வாக்கு அடைந்து, பிரச்சினைகளைத் தீர்க்க வல்லவர்களாக மாற வேண்டும்.
2.தமிழ் உணர்வுள்ள இராஜதந்திரிகளை, ஆட்சிவல்லுனர்களாகிய ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளை, பெரும் செல்வர்களை, பல்லின பண்பாட்டுக்குள் வாழக் கூடியவர்களை உலகளவில் அடையாளம் காணுங்கள், உருவாக்குங்கள்.
3.உதாரணமாக, செல்லப்பன் ராமநாதன் 6 வது சிங்கப்பூர் ஜனாதிபதி, தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் துணை பிரதமர் மற்றும் செல்வாக்கு செலுத்தி, இந்திய அரசைக் கட்டுப்படுத்தக்கூடிய தமிழ்நாடு தமிழர்களைப் போன்றவர்களை கண்டுபிடியுங்கள்.
4.இதைவிட அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான 37 வயதான இலங்கை கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் மேலும் மிக சக்திவாய்ந்த பதவிக்கு உயர வாய்ப்புகள் உள்ளன.
5.உலகளவில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாக தமிழர்கள் மாற வேண்டும். இதை முன்னெடுக்க ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தொடங்கி, திட்டங்களைத் தீட்டி, திட்டங்களை அமுல்படுத்தி, கண்காணித்து, கட்டுப்படுத்தி, நிறைவு செய்ய வேண்டும்.
6.இதனோடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிடின், இன அழிப்பு எங்கு நடக்கின்றதோ அங்கு இன அழிப்பை தடுக்க மற்றும் இதற்கு பொறுப்பானவர்களை தண்டிக்க ஒப்பந்தம் செய்த 144 நாடுகளைத் தூண்டி, தலையிடச் செய்து, பாதுகாப்போடு கூடிய சுய ஆட்சியை நிறுவ, பெரிய முயற்சிகளை தமிழர்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.