குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பில் இரு குடி நீர்த் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட போதிலும் ஒரு குடிநீர்த் திட்டத்திற்கான கிணற்றில் நீர் வற்றியதன் காரணமாக கெங்காதரன் குடியிருப்பு மக்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
அக்கராயனில் குடிநீர் நெருக்கடி மிகுந்த கிராமங்களில் ஒன்றாக கெங்காதரன் குடியிருப்பு விளங்கிய நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
கரைச்சி பிரதேச சபையினால் இக்கிராமத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தினை வடமாகாண முதலமைச்சர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த வைத்த நிலையில் இக்குடிநீர்த் திட்டத்தின் கிணற்றில் நீர் வற்றியதன் காரணமாக இக்குடிநீர்த் திட்டம் செயல் இழந்துள்ளது. இந்நிலையில் அக்கராயன் மத்தி, கிழக்குப் பகுதிகளுக்கு உழவு இயந்திரத்துடன் கூடிய நீர்த் தாங்கி மூலம் இடம் பெற்று வருகின்ற குடிநீர் வழங்கலை கெங்காதரன் குடியிருப்புக்கும் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே அக்கராயன் அணைக்கட்டு வீதிக் குடும்பங்களும் கரைச்சி பிரதேச செயலகம் அக்கராயனில் நடைமுறைப்படுத்தி வருகின்ற குடிநீர் வழங்கலில் தமக்கும் குடிநீர் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.