குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமன் கடற்பகுதியில் கடந்த வாரம் படகிலிருந்து தள்ளிவிடப்பட்ட அகதிகளில் உயிர் தப்பியவர்கள் ஆள்கடத்தல்காரர்கள் தங்களை தடியால் தாக்கியும் துப்பாக்கியால் சுடப்போவதாக அச்சுறுத்தியும் கடலில் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நீந்த தெரியாத பெண்கள் குழந்தைகளையும் ஆள்கடத்தல்காரர்கள் அச்சுறுத்தி கடலில் குதிக்கசெய்ததாக தப்பியவர்கள்; தெரிவித்துள்ளனர்.
ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்த ஆள்கடத்தல்காரர்கள் தங்களால் ஏமன் கடலோர பகுதிக்கு செல்ல முடியாது என தெரிவித்து படகில் இருந்த 120 பேரை கடலில் குதிக்குமாறு அச்சுறுத்தினர் எனவும் அதிகாலைக்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்ட சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோமாலிய துறைமுகத்திலிருந்து குறிப்பிட்ட படகு 16 மணித்தியாலத்திற்கு முன்னர் புறப்பட்டதாகவும் அந்த படகில் காணப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சோமாலிய பிரஜைகள் எனவும் அகதியொருவர் தெரிவித்துள்ளார்.
ஏமனிய கடல்பகுதியில் ஏற்கனவே பல ஆள்கடத்தல்காரர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதால் அங்கு செல்வது ஆபத்தானது என ஆள்கடத்தல்காரர்கள் தெரிவித்தனர் எனவும் இதன் காரணமாக தங்களை கடலில் குதிக்குமாறு அவர்கள் அச்சுறுத்தினர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிலர் சத்தமிட்டதுடன் கரைக்கு அருகில் தங்களை கொண்டுசெல்லுமாறு மன்றாடினர் எனவும் ஆனால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை ஏற்க மறுத்து படகில் இருந்தவர்களை தடியால் அடித்தனர் எனவும் அவர்களிடம் ஏகே 47 ரக துப்பாக்கி இருந்ததால் தாங்கள் எதிர்த்து பேசுவதற்கு முயலவில்லை அதன் பின்னர் மக்கள் கடலில் குதிக்க தொடங்கினர் என 25 வயது அப்டிரஹீம் இல்மி அனோ தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக கடலில் குதிக்கச் செய்யப்பட்டவர்களில் ஓரு சிலரே உயிர் தப்பினர் என அவர் தெரிவித்துள்ளார்