தமிழ் மக்களின் பிரதான அரசியல் கோரிக்கையின் முக்கியத்துவத்தை அழித்துவிடும் வகையில் சிலவெளிச் சக்திகள் திட்டமிட்டு இயங்கி வருவதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வாரஏட்டின் ஆசிரியர் தலையங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுயமரியாதையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம் வருமாறு
தேசியவிடுதலை வேண்டிநிற்கும் இனம் ஒன்று சமூகக் கட்டுப்கோப்பை பேண வேண்டியது பிரதானமாகும். சமூகக் கட்டுக்கோப்பை பேணுவதும் கண்காணிப்பதும் ஒவ்வொரு பொதுமகனுக்கும் உள்ளபொறுப்பு, ஆகவே போரினால் பாதிக்கப்பட்டு மாற்று வழி ஒன்றை தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சமூகச் சீரழிவுகள், பிரதான அரசியல் கோரிக்கையின் முக்கியத்துவத்தை அழித்துவிடும் என்பதை எல்லோரும் எச்சரிக்கையுடன் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்களும் அடிதடி சண்டைகளும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளன. இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். ஓன்று இயல்பாகவே சமூகத்தில் உள்ள ஊர்ச் சண்டியர்கள். மற்றும் குடும்பவன்முறைகள். இரண்டாவதுவெளிச் சக்திகளினால் திட்டமிடப்பட்டு இயக்கப்படும் குழுக்கள்.
இங்கே இரண்டாவதாக உள்ளகுழுக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அதாவது அரசியல் கோரிக்கையை மலினப்படுத்தவும் மீண்டும் பயங்கரவாதம் அது இது என்று கதைசொல்லி அஹிம்சை வழியிலான மக்களின் தற்போதைய போராட்டங்களை குழப்பவும் சர்வதேச ஆதரவை திசைதிருப்பவும் இந்தக் குழுக்கள் மூலமான வன்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவேவெளிச் சக்திகளினால் இயக்கப்படும் அந்தகுழுக்கள் பற்றிய விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதற்கு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள், பொது நிலையினர் ஆகியோரின் பங்களிப்பு அவசியமாகும். அதேவேளை ஊர்ச் சண்டியர்களின் வாள்வெட்டுக்கள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை அந்தந்த பிரதேசமக்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். இளையவர்கள்தான் குழு மோதல்களில் ஈடுபடுகின்றனர். சிலவேளை அவ்வாறான குழு மோதல்களை சிலவெளிச் சக்திகள் தூண்டிவிடுகின்ற சம்பவங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய மறுக்கப்படும் காரணங்களினால் அந்தமோதல்களை தடுக்க முடியாமல் போகின்றன.
எனவேதான் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தில் உள்ளபெரியவர்கள் ஒன்றுசேர்ந்து இளையவர்களின் நடத்தை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். போர் ஒன்று நடைபெற்று அரசியல் தீர்வும் உரியமுறையில் முன்வைக்கப் படாத ஒரு சூழலில் சமூகத்தில் அமைதியை குழப்புவது இலகுவானது. குறிப்பாக மக்கள் மத்தியில் இருக்கும் விரக்தி, ஏக்கம், பொருளாதார பிரச்சினைகள் போன்ற பலவீனங்களை மையமாகக் வைத்து சிலவெளிச் சக்திகள் உள்ளே புகுந்து ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன. அத்துடன் முன்னாள் போராளிகள் மீதும் குற்றம்சுமத்தி 30 ஆண்டுகால போராட்டத்தை மாசுபடுத்தவும் முற்படுகின்றனர்.
எனவே இவ்வாறானசெயற்பாடுகள் மூலம் அரசியல் கோரிக்கையின் மதிப்பை கொச்சைப்படுத்தி மலினப்படுத்தினால், வடக்கு கிழக்கில் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியுமென அந்த வெளிச் சக்திகள் நம்புகின்றன. ஆனால் பட்டறிவுள்ள தமிழச் சமூகம் அவ்வாறான இழி நிலைக்கு இடமளிக்காது என்ற உறுதியான மனத்தைரியத்தை அந்த வெளிச் சக்திகளுக்கு இடித்துரைக்க வேண்டும். மக்களின் ஜனநாய கவழியிலான போராட்டங்களை குழப்பவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சாதகமான நிலையை திசைதிருப்பவும் திட்டமிட்டு செயற்படும் அந்தவெளிச் சக்திகள் யார் என்பது மக்களுக்கு தெரியாததல்ல. ஆகவே சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமகனும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் தமிழர்களின் சுயமரியாதையை காப்பாற்றமுடியும்.
போரினால் நொந்து போயுள்ள சமூகத்தில் பலவீனங்கள், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை வெளிச் சக்திகள் பயன்படுத்தி பிரதான அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது எனபதில் உறுதிபூணுவோம்.