குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் நேசித்தார்கள் என்பது தமக்கு புரியவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை தமிழ் மக்கள் ஏன் கடவுளாகவும், படைப்பாளியாகவும் மீட்பராகவும் ஏன் கருதினார்கள் என்பது தமக்கு புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனுடன் நீண்ட நேரத்தை செலவிட்டு அவர் மீது தாக்கத்தை செலுத்த முடியாமைக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ள அவர் உலகில் வேறு எந்த வெளிநாட்டவரையும் விட அதிக சந்தர்ப்பங்கள் தாமே பிரபாகரனை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் ஓர் சிறந்த சமையல்காரர் எனவும், பிரபாகரனுடன் நெருங்கிப் பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் சரணடைய விரும்பியமை குறித்து நோர்வே, பசில் ராஜபக்ஸவிற்கு தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன், புலித்தேவன், நடேசன் ஆகியோர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை எனவும், எனினும் 12 வயதான பாலசந்திரனை படையினரே கொன்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.