குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பணி நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய பிரதமர், ஜனாதிபதியிடம் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை வேண்டுமென்றே நீதி அமைச்சர் காலம் தாழ்த்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும் தாம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்தது கிடையாது என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விஜயதாச ராஜபக்ஸ தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைய விஜயதாச ராஜபக்ஸவை பணி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.