குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முன்னாள் மீன் பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம் என மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண முதலமைச்சரினால் டெனிஸ்வரன் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனாலும் டெனிஸ்வரன் தானே தொடர்ந்து அமைச்சர் எனவும் , முதலமைச்சருக்கு அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் இல்லை எனவும் கூறி வருகின்றார்.
முதன்மை அமைச்சருக்கு அமைச்சுக்களை மாற்ற கூடிய அதிகாரம் உண்டு. முதன்மை அமைச்சருக்கு அதிகாரமில்லை என நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
வடமாகாண முதலமைச்சர் ஆளுனரிடம் டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்கி , புதிதாக அமைச்சர் ஒருவரை நியமிக்க உள்ளதாக கடிதம் மூலம் அறிவித்த போது ஆளுனர் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உண்டா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார்.
அதன் பின்னரே டெனிஸ்வரன் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு , நேற்று முன்தினம் அமைச்சு பதவிகளையும் ஆளுனர் முன்னால் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர்.
தான் அமைச்சர் என கூறி வரும் டெனிஸ்வரன் நேற்றைய தினம் வடமாகாண சபை அமர்வின் போது எதற்காக தனது ஆசனத்தை விட்டு வேறு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நேற்று தானே அமைச்சர் என கூறி தான் இதுவரை இருந்து வந்த ஆசனத்தில் தொடர்ந்து இருந்து இருக்கலாமே ? ஏன் அவர் அவ்வாறு செய்ய வில்லை ?
அதன் பின்னரும் டெனிஸ்வரன் தானே அமைச்சர் என கூறி வருகின்றார். இதனை நாம் சிறந்த நகைச்சுவையாகவே பார்க்கின்றோம். இந்த நகைச்சுவைக்காக டெனிஸ்வரனுக்கு 10 ரூபாய் பரிசு கொடுக்கலாம் என மேலும் தெரிவித்தார்.