171
மிகவும் அமைதியானவர். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால் அவருடைய எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை. எழுத்தின் மூலம் கருத்துக்களை அச்சொட்டாக வெளியில் கொண்டு வருவதில் வல்லவர். கூட்டங்களில் ஆற்றப்படுகின்ற உரைகளை மிகவும் இலாவகமாக எழுத்தில் வடிக்கும் ஆற்றல் பெற்றவர். அசுர வேகத்தில் எழுதும் ஆற்றல் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார். இது வேறு யாருமல்ல. அவர்தான் குருநாதன். திருகோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன்.
திருகோணமலையில் தனது ஊடகத்தொழிலை ஆரம்பித்த அவர் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையில் பணியாற்றினார். அதன் பின்னர் மீண்டும் தனது சொந்த ஊராகிய திருகோணமலைக்குத் திரும்பிச் சென்று அங்கு வாழ்நாள் முழுதும் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்து செய்தார்.
தமிழ் மக்களுடைய அரசியல் தலைமை தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொறுப்பில் இருந்த காலம் அது. கூட்டணியின் அரசியல் குழு கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் மாறி மாறி இடம்பெறுவது வழக்கம். அந்தக் கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் இடம்பெறும். கூட்டத்தில் பங்குபற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், அனல் பறக்கும் வகையில் பேசி தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள்.
அந்தக் கருத்துக்களும் மோதல்களும் பத்திரிகைகளுக்கு நல்ல தீனியாகி, பரபரப்பான செய்திகளாக வெளிவருவது வழக்கம். அக்காலத்தில் தினபதி பத்திரிகை இத்தகைய செய்திகளை வெளியிடுவதில் முன்னணியில் திகழ்ந்தது. அந்தப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றிய குருநாதனின் செய்திகள் விசேட தன்மையடன் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
கூட்டங்களில் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களும், அங்கு இடம்பெறுகின்ற மோதல்களும், வார்த்தைப் பிரயோகங்களும் அப்படியே பத்திரிகைகளில் வெளிவருவதனால், கூட்டணிக்குள் அரசியல் ரீதியாக சங்கடங்கள் ஏற்படுவது உண்டு.
ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்
இதனால் மூடிய கதவுக்குள் கூட்டங்களை நடத்துகின்ற உத்தியை கூட்டணியின் தலைவர்கள் பின்பற்றினார்கள். அவ்வாறு வவுனியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் குருநாதன் உட்பட சில ஊடகவியலாளர்கள் – நாங்கள் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மண்டபத்தின் பின் வரிசையில் அமர்ந்திருந்தோம்.
மண்டபத்தின் உள்ளே ஊடகவியலாளர்கள் இருப்பதைக் கண்டதும், சில முக்கியஸ்தர்கள் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, ஊடகவியலாளர்கள் அனைவரையும் மண்டபத்தைவிட்டு வெளியில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவித்தல் சாதாரணமானதாக இருக்கவில்லை. மண்டபத்தில் இருந்து வெளியேறுவது மட்டுமல்ல. கூட்டத்தில் பேசுபவர்களுடைய குரல் கேட்கும் தூரத்திற்கு, அப்பால் ஊடகவியலாளர்கள் செல்ல வேண்டும் என்று கண்டிப்பான குரலில் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மிகவும் பழமையான அந்த மண்டபத்தின் கதவுகள் யாவும் இறுக்கி பூட்டப்பட்டு நாங்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தோம்.
எங்களை வெளியில் போகச் சொன்னது மட்டுமல்லாமல் பேச்சாளர்களுடைய குரல்கள் கேட்கும் எல்லைக்கு அப்பால் செல்லுமாறு அறிவித்திருந்ததை, அந்தக் கூட்டம் தொடர்பான செய்திகளைத் திரட்டுவதற்காக விசேடமாக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த குருநாதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசப்படுகின்ற விடயங்கள் அனைத்தையும் மறுநாள் எப்படியாவது கூடிய அளவில் முழுமையாக பத்திரிகையில் செய்தியாக்கிவிட வேண்டும் என அவர் உறுதியான குரலில் கூறினார். அப்போது தினபதி பத்திரிகையின் வவுனியா செய்தியாளராகப் பணியாற்றிய வி.ஆர்.சுகுமார் உட்பட வேறு சிலரும் அவருடைய கருத்துடன் உடன்பட்டிருந்தோம்.
பரபரப்பை ஏற்படுத்தியது
தற்போது உள்ள வசதிகளைப் போன்று கைத்தொலைபேசிகள் இல்லாத காலம் அது. எனவே, கூட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை, கைத்தொலைபேசி ஊடாக அறிந்து கொள்ள முடியாத நிலைமை. கூட்டம் நடைபெறும்போது எவரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவும் மாட்டார்கள். வெளியாட்கள் எவரையும் சுட்டம் நடைபெறுகின்ற மண்டபத்திற்குள் அனுமதிக்கவும் மாட்டார்கள். கூட்டம் முடிந்த பின்னர்தான் அனைவரும் வெளியில் வருவார்கள்.
ஆனாலும், மண்டபத்தின் பலகைக் கதவுகளின் இடைவெளியிலும் ஜன்னல் கதவுகளின் இடைவெளியிலும் தீட்டிய காதை வைத்துக்கொண்டு பல மணித்தியாலங்களாக நடைபெற்ற கூட்டத்தின்போது, உள்ளே பேசப்பட்ட விடயங்களைக் கிரகித்துக் கொண்டோம். உரத்த குரலில் பேசியவர்களுடைய கருத்துக்களை ஒருவாறு கிரகிக்க முடிந்தது. குறைவான சத்தத்தில் பேசியவர்களுடைய கருத்துக்களை ஓரளவுக்கே எங்களால் கேட்க முடிந்தது.
ஆனாலும் கிரகித்த கருத்துக்களை வைத்துக் கொண்டு உள்ளே பேசப்பட்ட விடயங்களை முழுமையான செய்தியாக்கியிருந்தோம். மறுநாள் பத்திரிகைகளில் அந்தச் செய்தி முக்கியத்துவமளித்து தலைப்புச் செய்தியாக வீரகேசரி, தினபதி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அதிலும் குறிப்பாக கூட்டணியைக் கூடுதலாக விமர்சிப்பதைப் பழக்கமாகக் கடைப்பிடித்திருந்த தினபதி பத்திரிகை தனக்கே உரிய பாணியில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தமையும் பரபரப்புக்கு முக்கிய காரணமாகும்.
இதுபோன்று கடினமான சூழ்நிலைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் செய்திகளைக் கிரகித்து அதனை உரிய முறையில் வடிவமைக்கும் ஆற்றல் பல சந்தர்ப்பங்களில் குருநாதனிடம் இருந்து வெளிப்பட்டிருந்தது.
ஊற்றுப் பேனை
முன்னர், எழுதுவதற்கு பொதுவாகவே ஊற்றுப் பேனையே புழக்கத்தில் இருந்தது. அறுபதுகளின் இறுதியாக இருக்க வேண்டும். ஊற்றுப் பேனைக்குப் பதிலாக போல்பொயின்ட் பேனை அறிமுகமாகியிருந்தது. பாடசாலைகளில் ஊற்றுப் பேனையைப் பயன்படுத்திய மாணவர்கள் அப்போது புதிதாக அறிமுகமாகியிருந்த போல்பொயின்ட் பேனை மீது மோகம் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆரம்பத்தில் வந்த போல்பொயின்ட் பேனையின் மை மிகவும் தடிப்பாக இருந்த காரணத்தினால், தாளின் மறுபக்கத்திலும். அந்த மை அழுத்தமாக பதிந்திருக்கும். அதனால் தாளின் ஒரு பக்கத்தில் மாத்திரமே எழுதக் கூடியதாக இருந்தது. அத்துடன் அந்த மை கையில் இலகுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதாகவும் இருந்ததன் காரணமாகவே மாணவர்கள் அதனைப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் சில காலத்தின் பின்னர் போல் பொயின்ட் பேனையின் மை ஊறிப்பிடிக்காத வகையில் தரமுயர்த்தப்பட்டதையடுத்து, பாடசாலைகளிலும் போல்பொயின்ட் பேனையின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுத் தேவைகளிலும் போல் பொயின்ட் பேனை ஆக்கிரமித்திருந்தது.
ஆரம்பத்தில் ஊற்றுப் பேனையைப் பயன்படுத்திய ஊடகவியலாளர்களும் போல்பொயின்ட் Nபுனையின் வருகையையடுத்து, அதனைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், குருநாதன் கடைசிவரையிலும் ஊற்றப்பேனையையே உபயோகித்தார் என்பது விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
தொட்டுத் தொட்டு எழுதுவார்
ஊற்றுப் பேனை என்பது பேனைக்குள் மையை நிரப்பி அதனைப் பயன்படுத்தி எழுதுவதாகும். அக்காலத்தில் பைலட் என்ற பேனை மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அதேவேளை பார்க்கர் பேனை மிகவும் சிறப்பான பேனையாகத் திகழ்ந்தது. பார்க்கர் பேனையைப் பயன்படுத்துவது என்பது அக்காலத்தில் மிகுந்த கௌரவம் உடையதாகக் கருதப்பட்டது. அதிகமாக எழுதாவிட்டாலும், கையெழுத்து போடுவதற்காக மட்டும் பேனையை பயன்படுத்தியவர்கள்கூட கௌரவம் அந்தஸ்து என்ற அடிப்படையில் பார்க்கர் பேனையைப் பயன்படுத்தினார்கள். அத்துடன் பார்க்கர் பேனை என்பது விலை கூடியது. தரத்திலும் உயர்ந்திருந்தது.
நடுத்தர வர்க்க மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பைலட் பேனை செல்வாக்கு பெற்றிருந்தது. அதன் பின்னர் ஹீரோ, பிளட்டினம் போன்ற பேனைகள் சந்தையில் பிரவேசித்திருந்தன. இறுதியாக சியால் என்ற பெயரிலான ஊற்றுப் பேனை மாணவர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு சந்தையில் விடப்பட்டிருந்தது,
ஆனால் இந்தப் பேனைகள் அனைத்தும் மையை நிரப்பி வைத்துக் கொண்டு எழுதக்கூடியவை. இதற்கு முன்னதாக தொட்டு எழுதுகின்ற ஒரு பேனை பாவனையில் இருந்தது. மரப்பலகை ஒன்றின் நடுப்பகுதியில் இணைக்கப்பட்ட மூடியுடன் கூடிய இரண்டு சிறிய போத்தல்களில் மை நிரப்பப்பட்டிருக்கும். சிவப்பு மை ஒரு போத்தலிலும், நீல நிற மை மற்றுமொரு போத்தலிலும் விட்டிருப்பார்கள். அதன் அருகில் ஒரு கட்டைப் பேனையை வைப்பதற்கான அமைப்பு இருக்கும் நீளமான தடிபோன்ற அந்தக் கட்டைப் பேனையின் ஒரு முனையில் எழுதுவதற்குரிய நிப் பொருத்தக்கூடிய அமைப்பைக் கொண்டிருக்கும். அந்தப் பேனையைப் பயன்படுத்தி, நிப்பை மையில் தோய்த்து தோய்த்து எழுதுவார்கள்.
இந்த கட்டைப் பேனையையே குருநாதன் பயன்படுத்தி வந்தார். பத்திரிகை அலுவலகங்களில் செய்தி எழுதுவதற்காக டிமை பேப்பரையே பயன்படுத்தினார்கள். இந்தத் தாள் மை ஊறக்கூடியது. அவ்வாறு இருந்த போதிலும், மிகவும் நேர்த்தியாக தாளில் மை ஊறாத வகையில் மிகவும் உறுப்பான எழுத்துக்களில் எழுதும் ஆற்றலை குருநாதன் பெற்றிருந்தார். அந்தத் தாள்களில் மிகவும் தெளிவாக அவருடைய எழுத்துக்கள் முத்து முத்தாக அழகாகக் காட்சியளிக்கும்.
வானொலி செய்தி அறிக்கையும், எழுத்து வேகமும்,
மையைத் தொட்டு எழுதிய போதிலும், மிகவும் வேகமாக எழுதுவார். ஆங்கிலமானாலும்சரி, தமிழானாலும்சரி அவர் செய்தி எழுதும் இலாவகத்தையும் எழுதும் வேகத்தையும் பார்க்கும் போது மிகவம் ஆசையாக இருக்கும். அற்புதமாகவும் இருக்கும்.
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையில் அவர் பணியாற்றியபோது, வானொலியின் ஊடாக செய்திகளைத் திரட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இலங்கை வானொலியுடன், இந்திய வானொலி, லண்டன் பிபிசி உள்ளிட்ட பல்வேறு வானொலிகளின் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான ஒலிபரப்புக்களைக் கேட்டு, அவற்றில் வெளிவருகின்ற முக்கியமான செய்திகளைத் திரட்டுவதில் குருநாதன் மிகவும் வல்லவராக இருந்தார்.
பிலிப்பைன்ஸிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்ட வெரிட்டாஸ் வானொலியும் அப்போது பிரபல்யமாக இருந்தது. அதன் செய்தி அறிக்கை மற்றும் செய்திப்பார்வைகளில் இருந்து செய்திகளை உருவாக்குவதில் அவர் தவறியதில்லை.
இலங்கை வானொலியில் செய்தி ஒலிபரப்பாகும்போது முதலில் வருகின்ற தலைப்புச் செய்தியை வைத்து, முக்கியான செய்திகளை அடையாளம் கண்டுகொள்வார்.
பின்னர். ஒலிபரப்பாகின்ற செய்தியை உன்னிப்பாகக் கேட்டு செய்தி வாசிக்கப்படுகின்ற அதேவேகத்தில் செய்தியை எழுதிவிடுவார். செய்தி ஒலிபரப்பாகி முடியும் போது, அதில் இருந்து திரட்டப்பட்ட செய்திகளும் எழுதி முடிந்திருக்கும்.
தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஹிந்தி உட்பட வேற்று மொழி செய்தி ஒலிபரப்புக்களையும் அவர் செவிமடுத்து, அவற்றில் இருந்து முக்கியமான, பிநதிய செய்திகளைத் திரட்டுவதில் நிகரற்றவராகத் திகழ்ந்தார்.
வானொலி செய்தி அறிக்கைகள் மட்டுமல்ல. கூட்டங்களில் உரையாற்றுபவர்களுடைய உரைகளையும் மின்னல் வேகத்தில் எழுத்தில் பதித்துவிடுவதில் அவர் தன்னிகரற்றவராகவே இருந்தார்.
ஊரடங்குக்குள் செய்தி சேகரிப்பு
யுத்த மோதல்கள் மிகவம் தீவிரமாக இடம்பெற்ற அக்காலப்பகுதியில், பல்வேறு மொழிகளிலான செய்தி ஒலிபரப்புக்களையும் கேட்டு, அவற்றில் எல்ரீரீ அல்லது டெமில் டைகர்ஸ் என வருகின்ற சொற்பதங்களைப் பற்றிக்கொண்டு, அவற்றின் ஊடாக செய்திகளை மோப்பம்பிடித்து எழுதுவதில் குருநாதன் தனித்திறமை பெற்றிருந்தார்.
யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை மிக மிக மோசமாக இருந்த காலப்பகுதியில், இரவு பகல் பாராமல் வான்வழி தாக்குதல்களை அரச விமானப்படையினர் நடத்தி வந்தனர்.
அப்போது மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. யாழ் குடாநாட்டுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. மின்பிறப்பாக்கிகளையும் பெரிய அளவில் பயன்படுத்து முடியாத அளவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடும் நிலவியது.
இதனால் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி எரிக்கப்படுகின்ற விளக்குகளின் குறைந்த வெளிச்சத்தையே மக்கள் பயன்படுத்தின hர்கள். ஆனால், ஊரடங்கு வேளையில் கட்டிடங்களில் சிறிய வெளிச்சம் தெரிந்தாலே போதும். அங்கு நிச்சயமாக வான்வழி தாக்குதல் நடத்தப்படும்.
இத்தகைய சூழலில் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் இறுக மூடப்பட்டு, மொத்தமான திரைச்சீலைகள் இட்டு, உள்ளே பயன்படுத்திய மெல்லிய வெளிச்சம்கூட வெளியில் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருந்தன. இந்த மறைப்புக்குள்ளேதான் பற்றறிகளைப் பயன்படுத்தி, வானொலியை இயக்கி வானொலி செய்தி அறிக்கைகளை செவிமடுத்து, குருநாதன் செய்திகளைத் திரட்டினார்.
கடமைக்காக அலுவலகத்திற்குள் வந்தால், நினைத்த நேரம் வெளியில் செல்ல முடியாது. திடீர் திடீர் என நடைபெறும் தாக்குதல்களில் சிக்கி உயிரிழக்கவும், காயமடையவும் நேரிடக் கூடிய ஆபத்தான சூழல் அப்போது நிலவியது. பிற்பகலிலேயே ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துவிடும். சாதாரணமான நேரத்திலேயே வெளியில் நடமாடுவது உயிரச்சுறுத்தல் மிக்கதாக இருந்த போது ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்வது பற்றி கூறவே வேண்டியதில்லை.
அத்தகைய ஆபத்தான சூழலுக்கு மத்தியிலேயே குருநாதன் பணியாற்றினார். அவரைப் போலவே ஏனைய ஊடகவியலாளர்கள், பணியாளர்களும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றினார்கள்.
அக்காலப்பகுதியில் குருநாதனும், அவருடன் செயலாற்றியவர்களும் ஆற்றிய செய்திப் பணியானது மகத்தானது. மிகவும் நெருக்கடியான ஒரு சூழலில் அவர்கள் அவர்கள் ஆற்றிய செய்;திச் சேவையின் பெறுமதி மதிப்பிட முடியாதது.
இணையதள பிரவேசம்
வெறும் செய்திகள் மட்டுமல்லாhமல் செய்திக்கட்டுரைகளை எழுதுவதிலும் குருநாதன் வல்லவராகத் திகழ்ந்தார். அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டிருந்த அவர் அரசியல் துறையில் மட்டுமல்லாமல், சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களினதும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்தார்.
ஓர் ஊடகவியலாளர் என்ற வகையில், தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. தினபதி, உதயன் மற்றும் தினக்குரல் டெயிலி மிரர், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை வெளியுலகத்திற்கு ஆங்கில ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
இணையதள பிரவேசத்தின் மூலம், நவீன தொழில்நுட்பத்திலும், நவீன ஊடகத் தொடர்பாடலிலும் தன்னை இலகுவாக பிணைத்துக் கொண்டார். செய்திப் பணியில் அவர் கொண்டிருந்த வேகமும், துரிதமான செயல் வல்லமையும், இணையதள செய்திச் சேவைக்குப் பேருதவியாக அமைந்திருந்தன.
கணணியைக் கையாள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார். அதேபோன்று டிஜிட்டல் கமராவைப் பயன்படுத்துவது, படங்களை உரிய முறையில் எடிட் செய்வது போன்ற விடயங்களையும் அவர் இலகுவாகவும் விரைவாகவும் கற்றுக்கொண்டார்.
ஊடகத்துறையில் அவர் பெற்றிருந்த அனுபவமும், சமூகத்தின் பல்வேறு பிரிவினருடனும் அவர் கொண்டிருந்த தொடர்புகளும் நன்மதிப்பும் தமிழ்நெட் இணையதள செய்தியாளர் குடும்பத்தில் ஒருவராக அவரை இணைத்துக் கொள்வதற்கு ஊடகத்துறையின் ஜாம்பவானாகிய சிவராமைத் தூண்டியிருந்தது.
சிவராமினால் மிகவும் நேசித்து மதிக்கப்பட்டவர்களில் குருநாதனும் ஒருவராவார்.
தமிழ் ஊடவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்
ஊடகத்துறையில் நிறைந்த அனுபவத்தையும், ஆற்றலையும், அறிவையும் பெற்றிருந்த குருநாதன் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக, சக ஊடகவியலாளர்களினால் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டு பருவ காலம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றிய குருநாதன், தமிழ் ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை விருத்தி செய்வதற்கான பணிகளில் முழு மூச்சாகச் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத மோதல்களும், நாட்டின் தென்பகுதிகளில் திடீர்த்தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் தீவிரம் பெற்றிருந்த 1998 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீரகேசரியின் துடிப்புமிக்க ஊடகவியலாளராகச் செயற்பட்ட சிறிகஜன் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஜுலை 20 ஆம் திகதி வவுனியாவில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் என்னைக் கைது செய்தனர்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை நெருக்கமாகக் கண்காணித்து. அவர்களுடைய தாக்குதல்கள் இடம்பெறாத வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அப்போது பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது.
ரீஐடி – பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு என்றாலே எல்லோரும் அஞ்சி ஒடுங்கிய சூழல். சிங்கள ஊடகவியலாளர்கள் கூட அந்தப் பிரிவினருடன் தொடர்பு கொள்வதற்கும், அவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டறிவதற்கும் அஞ்சியிருந்த நேரம் அது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் சிறிகஜனும் நானும் கைது செய்யப்பட்டதையடுத்து. தமிழ் ஊடகவியலாளர்கள் பெரும் அச்சமடைந்தனர். தமிழ் ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியுமா என்ற அச்சம் கலந்த கேள்வி எழுந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தீவிர விhரணையின் பின்னர், நீதிமன்றத்தின் ஊடாக நாங்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தோம்.
அந்தப் பின்னணியிலேயே சரிநிகர் சிவகுமார், ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட முக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து தமிழ் ஊடகவியாலளர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியி;ருந்தார்கள். அதன் தலைமைப் பொறுப்பை அன்றைய சூழலில் துணிவுடன் ஏற்று அந்த ஒன்றியத்தை குருநாதன் திறம்பட வழிநடத்தியிருந்தார்.
பேரிழப்பு
பல்வேறு நெருக்கடிகள், ஆபத்தான சூழ்நிலைகளில் யாழ்ப்பாணத்திலும் திருகோணமமலையிலும் முழுநேர ஊடவியலாளராக தமிழ் சமூகத்திற்குப் பணியாற்றிய குருநாதன் தள்ளாத வயதில் தக்க துணையின்றி தனிமையில் வாடியிருந்தார். தார்மீக ரீதியில், சமூகப் பொறுப்புடன் கூடிய பராமரிப்பில்லாத நிலையில் அவர் இயற்கை எய்தியது வருத்தத்திற்குரியது.
ஆளுமையும் செயற்திறனும் மிக்கதோர் ஊடகவியலாளராகிய குருநாதனின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரைப் போன்று ஆயிரக்கணக்கில் ஊடகவியலாளர்கள் உருவாகுவதற்கு வழி சமைக்கப்பட வேண்டும்.
மாகாணங்களில் முழுநேரமாகப் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் உரிய தொழில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையிலேயே பணியாற்றுகின்றார்கள். வயதாகிய நிலையில் அவர்கள் சமூகத்தில் இருந்து தாங்களாகவே ஒதுங்கி விடுகின்றார்கள். அல்லது ஒதுக்கப்பட்டுவிடுகின்றார்கள். அத்தகைய ஒரு நிலையிலேயே அவர்களுடைய வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. இதனை குருநாதனின் மறைவு நிதர்சனமாகக் காட்டியிருக்கின்றது.
Spread the love