குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து விலகியதும் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்தின் தொழிலாளர் சுதந்திரம் குறித்த கொள்கைகளை கைவிட தீர்மானித்துள்ளதை வெளிப்படு;த்தும் ஆவணங்கள் கசிந்துள்ளன. பிரித்தானியா தனது தொழிலாளர்களிற்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வரும் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களிற்கு இரண்டு வருடங்கள் பிரித்தானியாவில்; தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்க தெரேசா மே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பிரித்தானியாவின் எதிர்கால திட்டங்கள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியம் பிரித்தானியாவை கடுமையாக சாடியுள்ளது.
பிரித்தானியாவின் குடியேற்றவாசிகள் குறித்த திட்டங்கள் இராஜதந்திர உணர்வுகளை பாதித்துள்ளன என ஐரோப்பிய ஓன்றிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு ஸ்திரதன்மை மற்றும் தொடர்ச்சி அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியம் பிரித்தானியா ஆகியவற்றிற்கு இடையில் இடம்பெறும் பேச்சுக்களில் ஐரோப்பிய ஓன்றியத்தின் சார்பில் கலந்துகொள்ளும் பிரதான அதிகாரியான மைக்கல் பார்னியர் பிரித்தானியாவின் திட்டத்தை நச்சுத்தன்மை கொண்டது என வர்ணித்துள்ளார்.