Home இலங்கை மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் – நிலாந்தன்

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் – நிலாந்தன்

by admin


ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது பற்றுக்கொண்டிருப்பதையும்  மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (mental fetter)
-கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் – 798

கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவது மகாசங்கம்.  அண்மையில் மட்டக்களப்பில் ஒரு தலைமைப் பிக்கு நீதிமன்றத்தின் கட்டளையை பலர் பார்த்திருக்கப் பகிரங்கமாகக் கிழித்தெறிந்தார். தமிழ் – முஸ்லிம் காணிப் பிணக்கொன்றில் தமிழர்களுக்கு சாதகமாக தலையிட்டு அவர் அவ்வாறு செய்தார். ஆனால் இலங்கைத்தீவின் சட்டம் ஒழுங்கை பரிபாலிக்கும் எந்தவொரு தரப்பும் அவருக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்தளவிற்கு பிக்குக்கள் நாட்டில் சக்தி மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள்.

இச்சிறிய தீவில் அரசியல் தீர்வைப்பற்றி விவாதிப்பதாக இருந்தாலும் நல்லிணக்கத்தை பற்றி சிந்திப்பதாயிருந்தாலும் அதை விகாரைகளிலிருந்து தொடங்கினால்தான் விளைவுகள் யதார்த்தமானவைகளாக அமையும். ஐக்கிய இலங்கைக்குள் கண்டடையப்படவேண்டிய எந்தவொரு தீர்வும் விகாரைகளுக்குள்ளிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஒரேயொரு தீர்வு மட்டும் அதாவது வெளிச்சக்திகள் தலையிட்டு அல்லது தமிழர்கள் போராடி ஒரு தனிநாட்டைப் பிரிக்கும் ஒரு தீர்வுக்கு மட்டும்தான் மகாசங்கத்தின் ஆசீர்வாதம் தேவையில்லை.

இவ்வாறானதோர் அரசியல் சூழலில் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் கவனிப்புக்குரியவை. ஐலன்ட் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக இருந்த விஜேசோம தமிழ் அரசியல்வாதிகளை வரையும் பொழுது வேட்டியணிந்து திருநீறு பூசி பொட்டு வைத்த உருவங்களையே வரைவார். அவற்றின் வேட்டிக்குப் பின்னால் ஒரு புலிவால் மறைந்திருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் தமிழ் மிதவாதிகள் மத்தியிலும் சரி, ஆயுதப் போராளிகள் மத்தியிலும் சரி திருநீறு பூசி பொட்டு வைத்த தோற்றத்தோடு எவரும் காணப்படவில்லை. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின்னரே அப்படியொரு மிதவாதி அரங்கினுள் பிரவேசித்தார். தயான் ஜெயதிலகவினால் தமிழ் மென்சக்தி என்று அறிமுகம் செய்யப்பட்ட விக்னேஸ்வரனே அது. காட்டூன்களில் மட்டும் கண்ட திருநீறும் பொட்டும் அணிந்த, நெத்திக்கு நேரே கருத்தைச் சொல்லும் ஒரு தமிழ் மிதவாதியை இப்பொழுதுதான் மகாநாயக்கர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

இச்சந்திப்பில் விக்னேஸ்வரன் மாகாணசபை முதல்வராகவும் அதே சமயம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகவும் பங்குபற்றியிருக்கிறார். இச் சந்திப்பில் பேரவையைச் சேர்ந்த இருவர்-பேராசிரியர் சிவநாதனும், கலாநிதி திருக்குமரனும் -பங்குபற்றியிருக்கிறார்கள். இந்த இரட்டைப் பரிமாணம் இச்சந்திப்புக்களுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. கூட்டமைப்புக்குள் வராத அல்லது கூட்டமைப்பில் அதிருப்தியுற்ற தரப்புக்களின் அரங்கமே பேரவையாகும். கூட்டமைப்பின் முதல்வராகவும் அதே சமயம் பேரவையின் இணைத்தலைவராகவும் விக்னேஸ்வரன் பங்குபற்றியதன் மூலம் ஆகக்கூடிய பட்சம் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை அவர் மகாசங்கத்தவர் முன் கொண்டு சென்றுள்ளார். இச்சந்திப்பில் வடமாகாண அமைச்சர் அனந்தியும், உறுப்பினர் சிவநேசனும் பங்குபற்றியிருக்கிறார்கள். அனந்தி ஒரு முன்னாள் இயக்கப் பிரமுகரின் மனைவி. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடும் ஒருவர். அவரையும் தன்னோடு அழைத்துச் சென்றதன் மூலம் விக்னேஸ்வரன் மகாசங்கத்திற்கு சில செய்திகளை உணர்த்த முற்பட்டிருக்கிறார்.

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்படவிருக்கும் முதன்மையை அகற்றத் தேவையில்லையென்று சம்பந்தர் – சுமந்திரன் அணி கருதுகிறது. ஆனால் விக்னேஸ்வரன் தமிழ்ப் பகுதிகளில் அந்த முதன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்துத் தெரிவித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை மகாநாயக்கர்கள் சந்தித்த போது அச்சந்திப்புக்கள் எப்படியிருந்திருக்கும்?

மல்வத்தை பீடத்தில் சந்திப்பு மிகவும் சுமுகமாகவும், இயல்பானதாகவும் இருந்ததாகத் தெரிகிறது. சந்திப்பிடத்திற்கு அனந்தியின் வாகனம் வந்து சேர்வதற்கு ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் தாமதமானதால் குறித்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னரே சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. மகாநாயக்கர் போரின் விளைவுகளைப் பற்றியே அதிகம் பேசியிருக்கிறார். போரின் காரணத்தைப் பற்றியோ பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் விக்னேஸ்வரன் தன் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார். சமஷ்டியை முதலில் கேட்டது கண்டிச் சிங்களவர்கள் தான் என்பதையும் தமிழர்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளுக்கும் முன்னரே பண்டாரநாயக்க சமஷ்டியைப் பரிந்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மகாநாயக்கர் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பு அவ்வாறு இருக்கவில்லை. மகாநாயக்கரோடு பன்னிரண்டு மகாசங்கப் பிரதானிகள் அச்சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார்கள். மல்வத்தை பீடத்தோடான சந்திப்பின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தங்களைத் தயார்படுத்தி இருந்திருக்கக்கூடும். சந்திப்பை வழிபாட்டிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். இங்கேயும் விக்னேஸ்வரன் சமஷ்டி பற்றி அழுத்திக் கூறியுள்ளார். தனது உரையின் தொடக்கத்தில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பொதுவாக அவர் பேசியிருக்கிறார். உரையின் பின்பாதி முழுவதிலும் அவர் சமஷ்டியை அழுத்திக் கூறியிருக்கிறார். தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என்பதனையும் அழுத்திக் கூறியிருக்கிறார். ஊவா, மேல், சப்ரகமூவ மாகாணங்களில் முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் வடக்கில் அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மகாசங்கத்திற்கு நோகாமலேயே சிரித்துக்கொண்டே அவர் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். நிலத்திலிருந்து சற்று உயர்வான குஷன்களே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. வழமையாக அரசியல்வாதிகள் மகாசங்கத்தினரை சந்திக்கும் பொழுது இவ்வாறான குஷன்களே வழங்கப்படுவதுண்டாம். குஷன் இருக்கையின் வெக்கை காரணமாகவும் தொடர்ச்சியாக முதுகை நிமிர்த்திக் கொண்டு அதில் அமர்ந்திருப்பதன் அசௌகரியம் காரணமாகவும் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இருமியிருக்கிறார். எனினும் தான் சொல்ல வந்ததை உறுதியாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து மகாநாயக்கர் உரையாற்றியிருக்கிறார். அவருடைய உரை அதிகம் சம்பிரதாயபூர்வமானதாகக் காணப்பட்டதாம். அவரைத் தொடர்ந்து பேசிய சங்கப்பிரதானிகள் சிங்கள பொளத்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஆர்வமாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுடைய உடல்மொழி, முகபாவனை என்பவற்றிலும் இணக்கம் குறைவாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இனப்பிரச்சினை என்ற ஒன்றை முதன்மைப்படுத்தவில்லை. நாட்டின் ஏனைய எல்லாப் பகுதிகளுக்குமுள்ள பிரச்சினைகளே வடக்கு கிழக்கிற்கும் உண்டு என்ற தொனியை அதிகமாக உணர முடிந்ததாம். அரசியல்வாதிகளே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் சாதாரண சனங்கள் அமைதியை விரும்புவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். தமது மகாநாயக்கர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சாதாரண சனங்களோடு உரையாடிய போது இதை உணர முடிவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் பௌத்தர்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குவதிற் தவறில்லை என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பெரும்பான்மை மக்களின் நல்லிணக்கம் காரணமாகவே நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடிகிறது என்ற தொனிப்பட ஒருவர் உரையாற்றியிருக்கிறார். ஒரு பிரதானி விக்னேஸ்வரனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிங்களவர்களைத் திருமணம் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். தென்பகுதியில் கட்டப்படும் இந்துக் கோவில்களுக்கு மகாசங்கம் எதிர்ப்புக் காட்டுவதில்லை என்றும் அதேசமயம் வடக்கு கிழக்கில் கட்டப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்புக் காட்டப்படுகிறது என்றும் வடக்குக் கிழக்கில் ஏற்கனவே விகாரைகள் இருந்திருக்கின்றன என்ற தொனிப்படவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தபோது விக்னேஸ்வரன் அதற்குப் பதில் கூறியுள்ளார்.

சங்கப் பிரதானிகளின் உரைகள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டவைகளாகவும், இணக்கம் குறைந்தவைகளாகவும் காணப்பட்ட ஒரு சூழலில் இச்சந்திப்புக்களின் போது விக்னேஸ்வரனோடு கூட இருந்த மூத்த அரசியல் ஆய்வாளராகிய குசல பெரேரா தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவை சங்கப் பிரதானிகளிடம் கையளிப்பதை; தவிர்க்குமாறு தொடக்கத்தில் கேட்டிருக்கிறார். எனினும் உரையாடலின் போக்கில் இறுதியாக அந்த முன்மொழிவு சங்கப் பிரதானிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இச்சந்திப்பின் பின் விருந்தினர்களை தேநீர் அருந்த அழைத்திருக்கிறார்கள். தேநீர் அருந்தும் இடத்தில் ஒரு பிக்கு சுமுகமாகவும் இணக்கமாகவும் உரையாடியிருக்கிறார். முன்னைய சந்திப்போடு ஒப்பிடுகையில் தேநீர் விருந்து அதிகம் இணக்கமானதாகக் காணப்பட்டதாம்.

மல்வத்த பீடத்தோடான சந்திப்புகளோடு ஒப்பிடுகையில் அஸ்கிரிய பீடச் சந்திப்பானது இணக்கம் குறைந்ததொன்றாகவே காணப்பட்டுள்ளது. மல்வத்த பீடம் அரசியலை வெளிப்படையாகப் பேசாமல் தவிர்த்திருக்கிறது. அஸ்கிரிய பீடம் அதனை மதகுருக்கள் என்ற தோரணையில் முன்வைத்திருக்கிறது. நாட்டின் இதயமான பிரச்சினை ஒன்றைக் குறித்து நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகிய மகாசங்கம் வெளிப்படையாக உரையாடாமல் தவிர்ப்பது என்பது ஓர் அரசியல்தான். இது விடயத்தில் மல்வத்த பீடத்தின் அணுகுமுறை யு.என்.பியின் அணுகுமுறையை நினைவூட்டுகின்றது. அஸ்கிரிய பீடத்தின் அணுகுமுறை மகிந்த அணியை நினைவூட்டுகின்றது. இப்பீடமானது ஏற்கெனவே மகிந்தவின் அரசியலை ஆதரித்து வருகிறது. காணாமல் போனவர்களின் அலுவலகம் உருவாக்கப்படுவதை முதலில் எதிர்த்தது அஸ்கிரிய பீடம்தான். ஒரு புதிய யாப்புத் தேவையில்லை என்றும் இருக்கின்ற யாப்பையே திருத்தங்களோடு தொடர்ந்தும் வைத்திருக்கலாம் என்றும் முதலில் கருத்துத் தெரிவித்தது அஸ்கிரிய பீடம்தான்.

விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் இரண்டு பீடங்களும் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டிருந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீரவு என்று வரும் பொழுது குறிப்பாக சிங்கள பௌத்த மேலாண்மையை அதிலும் குறிப்பாக யுத்த வெற்றி நாயகர்களை பாதுகாப்பது என்று வரும் பொழுது இரண்டும் ஒன்றாகி விடும். விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஈழப் போரிற்குப் பின் மகா சங்கத்தோடு ஒரு தமிழ் மிதவாதத் தலைவர் உரையாட முன்வந்தமை என்பது முக்கியத்துவமுடையது. தமிழ்த்தரப்பு நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் மகாசங்கத்தினர் முன்னிலையில் விட்டுக்கொடுப்பின்றி முன்வைத்திருக்கிறார்.

இவ்வாறான சந்திப்புக்களை சம்பந்தரே மேற்கொள்ளவிருப்பதாக முதலில் செய்திகள் எழுந்தன. சம்பந்தரும் சுமந்திரனும் அவ்வாறு சந்திப்புக்களை மேற்கொண்ருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நிச்சயமாக விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டது போல ஓர் அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

அஸ்கிரிய பீடத்தைச் சந்திக்கப் போய் விக்னேஸ்வரன் வாங்கிக் கட்டிக்கொண்டார். என்ற ஓர் அபிப்பிராயம் கொழும்பில் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறதாம். நல்லிணக்கத்தையும், இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அதன் மெய்யான பொருளில் கண்டுபிடிக்க விளையும் மிகக் கடினமான பயணம் ஒன்றை விக்னேஸ்வரன் தொடக்கி வைத்திருக்கிறார். யாருடன் பேச வேண்டுமோ அவர்களோடு அவர் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் வடக்கில் காணி விடுவிப்புத் தொடர்பில் படைப் பிரதானிகளோடு கூட்டமைப்பு பேச்சு நடாத்தியது. அவ்வாறு பேச்சு நடாத்துமாறு அரசாங்கமே அறிவுறுத்தியதாக கருதப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் படைத்தரப்போடு பேசப்போனது தவறு என்றும் மக்களாணையைப் பெற்ற தலைவர்கள் மட்டத்திலேயே விவகாரம் தீர்க்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்றும் அப்பொழுது சுட்டிக்காட்டப்பட்டது. அது சரிதான். ஆனால் இலங்கைத் தீவின் யதார்த்தம் என்னவென்றால் படைத்தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்று விட்டது என்பதுதான். காணி விடுவிப்புத் தொடர்பில் படைத்தரப்பின் கரிசனைகளை மீறி மைத்திரி மட்டுமல்ல மகிந்தவும் எதையும் செய்ய முடியாது. அப்படித்தான் மகாசங்கத்தின் விடயத்திலும்.
சில ஆண்டுகளுக்கு முன் நோர்வேயில் எனது நண்பர் ஒருவர் ஒரு புரட்டஸ்தாந்துப் போதகரை எனக்கு அறிமுகப்படுத்தினார். இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்மொழியப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அப்போதகர் இலங்கைத் தீவில் செயற்பட விரும்புவதாக தெரிவித்தார். நான் அவரிடம் சொன்னேன் நல்லிணக்கத்தை தேவாலயங்களில் இருந்து தொடங்கினால் அது சிங்கள பௌத்தர்கள் மத்தியில் வேறு விதமாக விளங்கிக்கொள்ளப்படும். மாறாக அதை விகாரைகளிலிருந்தே தொடங்க வேண்டும். அதுதான் இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தம் என்று. இக்குரூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் முதல் எத்தனமே விக்னேஸ்வரனின் சந்திப்புக்களாகும். நல்லிணக்கத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட இம் முதல் அடியானது இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் இணங்கிப் போக முடியாத அடிப்படைகள் அப்படியே மாறாதிருப்பதை எண்பிப்பவைகளாக முடிவடைந்திருப்பது இலங்கைத்தீவின் துயரமே.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More