குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சிவகரன் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பேச்சாளர் ஞானசம்பந்தன் ஆகியோரும் மலர்மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினார்கள்.
அத்துடன் மகாத்மா காந்தி கீதம் வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் இசைக்கப்பட்டது. பின்னர் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்களும் மலர் மாலை அணிவித்ததுடன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சண்முகநாதன் மற்றும் காந்தியவாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.