சசிகலா கணவர் நடராஜனிற்கு, விதிகளை மீறி கல்லீரல் பொருத்தப்பட்டதா என்ற சந்தேகமும் புதிய சர்ச்சையும் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையகத்தில் இருந்து கருத்துக்கள் வெளியிடப்படாமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயலைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கார்த்திக் விபத்தால் மூளைச் சாவு அடைந்தார் எனக் கூறப்பட்டது. அவருடைய உறுப்புகளையே நடராஜனுக்குப் பொருத்தியதாகத் தகவலும் வெளியானது.
எனினும் நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, நடராஜனுக்கே முளைச்சாவை அடைந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதாக அறிவிக்காமல், 74 வயது நபருக்கு பொருத்தப்பட்டதக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலையில் கார்த்தி மூளைச் சாவு அடைந்த விவகாரத்தில் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி கடந்த 30ம் திகதி தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளைச்சாவடைந்துவிட்டதாக பெற்றோருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்பின் திடீரென கார்த்திக் உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை மட்டுமே தானம் பெறப் போகும் நபருக்கு அளிப்பது வழக்கம். ஆனால், கார்த்திக்கின் மொத்த உடலையும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்னை செல்லப்பட்டது எப்படி? யார் கார்த்திக் உடலையே சென்னைக்கு எடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தது? அப்படியானால் விபத்து நடந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள்ளேயே மூளைச்சாவு நிலைக்கு கார்த்திக் “தள்ளப்பட்டாரா”? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.