காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது மகனும் காங்கிரஸில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h. ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் தலைவராவார் என்ற கேள்வியை பல ஆண்டுகளாக நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் எனவும் அது இப்போதுதான் நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பின்னர், தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், சோனியா காந்தியின் இந்தக் கருத்து பற்றி கேட்டபோது, ராகுல் அதுபற்றி பதிலளிக்காமல் பேச்சை திசை திருப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் செயல் குழு விரைவில் கூடி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திகதியை முடிவு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
அதில் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார். 19 ஆண்டுகளுக்கு முன் கட்சியின் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, ராகுல் காந்தியும் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.