குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளை வகித்து வருவோரின் பிரஜாவரிமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
தாய்லாந்து வங்கி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சலில் முனசிங்க வெளிநாட்டுப் பிரஜை என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் உள்நாட்டுப் பிரஜைகளா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சலில முனசிங்கவின் கட்சியின் அன்னப் பறவை சின்னத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பிரஜைகள் அரசியல் கட்சியொன்றில் பதவி வகிப்பதற்கு தற்போதைய சட்டங்களில் தடை விதிக்கப்படவில்லை என்ற போதிலும், தார்மீக ரீதியில் இவ்வாறு பதவி வகிப்பதற்கு இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மொத்தமாக 70 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன.