தொழிலுக்காக சவூதி அரேபியாவிற்கு சென்று 17 ஆண்டுகளாக அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலையீட்டினால் குறித்த பெண் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அம்பன்பொல – அட்டவரல பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த 2000ம் ஆண்டு வேலை நிமித்தம் சவூதி அரேபியா சென்றுள்ள நிலையில் சுமார் 15 ஆண்டுகளாக ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதுடன், சில தடவைகள் மாத்திரமே உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இராஜதந்திர அதிகரிகளினால் அந்தப் பெண் பணி புரிந்து வந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு சுமார் 36 இலட்சம் ரூபா சம்பள உதவித் தொகையாக பெற்றுக் கொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.