மரங்களின் மனிதம்
மரங்கள் அறிவதில்லை
மனிதர்கள் தம்மைக் கண்டு அச்சமுறுவதை
மரங்கள் அறிவதில்லை
மனிதர் ஆதிக்கம் நிலைநாட்ட
தம்மை வளர்த்து வருவதை
மரங்கள் அறிவதில்லை
தம்மைத் துளிரிலேயே இல்லாதாக்கிவிடும்
மனித அச்சத்தின் பின்புலங்களை
மரங்கள் அறிவதில்லை
மரங்கள் அறிவதில்லை
இவை எதையுமே மரங்கள் அறிவதில்லை
ஆயினும் ஆயினும் மரங்கள்
குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி
மனிதர்கள் ஆறவும் அமரவும்
குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி
சி. ஜெயசங்கர்
31.10.2017
இலங்கை என்பது எம் தாய்த் திருநாடு
மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை
உணர்வும் அறிவும் கலந்தவை
விருட்சங்கள் அழகியவை பசுமை நிறைந்தவை
குளிர்மையும் நிழலும் தருபவை
முட்சிறகுகள் விரிக்கும் மனிதப் புத்தியில்
இயல்பு கெட்டுத் திரிந்தன
மொழிகளின் விருட்சங்களின் இருப்பு
சிங்களம் மொழிகளின் அரசன்
கித்துள் மரங்களின் அரசனாயிற்று
மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை
உணர்வும் அறிவும் கலந்தவை
விருட்சங்கள் அழகியவை பசுமை நிறைந்தவை
குளிர்மையும் நிழலும் தருபவை
*ஈழத்துப் பாடலொன்றி முதல்வரி
சி. ஜெயசங்கர்
31.10.2017