குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றுமுதல் நிர்வாக முடக்கத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் குறித்த மூன்று பீடங்களின் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதிகளிலிருந்தும் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
எனினும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நிர்வாகமுடக்க போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த பீடங்களின் மாணவர்கள் தங்கள் போராட்டத்தினை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்
மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்ப்படும்வரை தாம் தொடர்ந்தும் நுழைவாயில்களைப் பூட்டி நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளப்போவதாக யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணன் மேனன் தெரிவித்தார்.
நாளை முதல் நிர்வாகம் சீராக நடக்கும்.
அதேவேளை அது தொடர்பில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் ஆர் . விக்னேஸ்வரன் தெரிவிக்கையில் , மாணவர்கள் நேற்று முதல் நிர்வாக நடவடிக்கைகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அது தொடர்பில் மாணவர்களுடன் பேச்சுக்களை நடத்தினோம். மாணவர்கள் அதற்கு உடன்படாது தாம் தொடர்ந்து நிர்வாக முடக்கல் போராட்டத்தினை முன்னெடுக்க போவதாக தெரிவித்தனர்.
அதனால் இன்று முதல் காலவரையின்றி கலை , விஞ்ஞான மற்றும் வணிக முகாமைத்துவ பீட மாணவர்கள் யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்நுழைய தடைவித்துள்ளோம். அத்துடன் விடுதிகளில் இருக்கும் மாணவர்கள் நாளை மாலை 4 மணிக்கு முதல் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு இட்டுள்ளோம்.
நாளை முதல் பல்கலைகழக நிர்வாக நடவடிக்கைகள் சீரான முறையில் நடைபெறும். இதேவேளை யாழ்.பல்கலைகழகத்தின் கீழான ஏனைய வளாக மற்றும் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் சீரான முறையில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.