குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் வாக்குறுதியையடுத்து வயாவிளானில் வலி. வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டம் நிறைவுக்கு வந்தது. வலிகாமம் வடக்குப் பிரதேச செயலகத்துக்கு வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்வை வலியுறுத்தி இன்று காலை அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் பேரணி வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றலிலிருந்து ஆரம்பித்து வயாவிளான் இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலைச் சென்றடைந்தது.
அங்கு வந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பேரணியில் கலந்து கொண்ட மக்களுடன் பேச்சு நடத்தினார். அத்துடன் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராட்சியும் போராட்டத்தில் பங்கேற்ற மக்களுடன் பேச்சு நடத்தினார். அவரிடம் மக்களால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இராணுவ உயர்மட்டத்தின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி வாக்குறுதி வழங்கினார். அதனை அடுத்து போராட்டம் நிறைவு செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் மக்களிடம் தெரிவித்தார்.
காணிகளை விடுவிக்கக்கோரி வயாவிளான் படைமுகாமுக்கு முன்பு போராட்டம்
Nov 5, 2017 @ 04:52
வலி. வடக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்திவைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி வயாவிளான் படைமுகாமுக்கு முன்பாக மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனனர். கடந்த 27 வருடகால பகுதியாக குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
அதனால் குறித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து நலன்புரி நிலையங்கள் , வாடகை வீடுகளிலையே வசித்து வருகின்றனர். அந்நிலையில் இன்றைய தினம் காலை இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.