குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி சொலிசுட்டர் ஜெனரலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ரவி கருணாநாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார். யசந்த கோதாகொடவும், சில ஊடக நிறுவனங்களும் தமக்கு எதிராக போலி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். பென்ட்ஹவுஸ் குடியிருப்பின் உரிமையாளர் அனிகா விஜேசூரியவிற்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவா குறிப்பிட்டுள்ளார்.
சானில் நெத்திகும்புர என்பவர் கொலை மிரட்டல் விடுத்தார் எனவும் அவர் தமது உறவினர் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தமக்கும் சானிலுக்கும் எவ்வித உறவு முறையும் கிடையாது எனவும் அவ்வாறு உறவு முறை இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தாம் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.