குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் பெய்து வருகின்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக உப தலைவருமான ஆர்.ஜெயசேகரம் உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்துள்ளார். கடந்த பல நாட்களாக யாழில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வு நிலப்பகுதிகளில் குடியமர்துள்ள மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்தும் பொது இடங்களில் தங்கியுள்ளனர்.
குறிப்பாக யாழ் நகரை அண்மித்த பொம்மைவெளி, நித்தியவொளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பல கஷ்ரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறித்து மாகாண சபை உறுப்பினர் ஜெகசேகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் அந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தான் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் தன்னுடைய மாதாந்த சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் வர்த்தக சங்கத்துடன் இணைந்து வழங்கி வருவதன் தொடராக கடந்த மாத சம்பளத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவைத்தார்.
இதன் முதற்கட்டதாக பொம்மைவெளி மக்களுக்கு சமையல் உணவுகளை வழங்கி வைத்தார். அத்தோடு நாளைய தினம் நித்தியவொளி மக்களுக்கும் இந்த உணவுப் பொருட்களை வழங்கி வைப்பதாகவும் தெரிவித்தார். இதன் போது யாழ் வர்த்தக சங்க செயலாளர் உள்ளிட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.