குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேர் மீது திணைக்கள மட்ட ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலருக்கு எதிராக சமுர்த்தி திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், பண மோசடியில் ஈடுபட்டதாக 5 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிர்வாக ரீதியான குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 3 உத்தியோகத்தர்களும் கரவெட்டி, சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா ஒரு உத்தியோகத்தர்க்குமே இவ்வாறு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டது.
மேலும் 3 சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு எதிராக பண மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட தலா ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் திணைக்கள ரீதியான கணக்காய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு விசாரணைகளில் உள்ளவர்களில் மூவர் பெண்கள் ஆவார்கள்.
இதேவேளை, மண்டைதீவில் சிறுமி ஒருவர் மீது தவறாக நடக்க முற்பட்ட வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.